பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
ஒளி - 07
சுடர் - 01
இதழ் - 73
June 2006
தமிழிலக்கியத்தின் சமகால
இயங்குநிலை - அதன்
திசை வழிகளைத் தேடி
கனடாவிலிருந்து
கலாநிதி நா. சுப்பிரமணியன்
முன்னுரையாக
ஞானம் கலை இலக்கிய இதழின் ஆசிரியர், அதில் தத்தம் ஆளுமைகளைப் பதிவு செய்து நிற்கும் எழுத்தாளர்கள், மற்றும் அதன் வாசகப் பெருமக்கள் ஆகிய அனைவருக்கும் வணக்கம். ஞானம் இதழ் தொடர்ந்து எனது பார்வைக்குக் கிடைக்கின்றது. ஈழத்தின் தமிழிலக்கியச் சூழலின் இயங்கு நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்கு அது பெருந்துணை புரிகின்றது. அதே வேளை அதனுடைய பார்வைப்பரப்பு ஈழம் என்ற புவியெல்லையைத் தாண்டி தமிழ்கூறும் நல்லுலகை நோக்கி விரிந்து செல்வதையும் உணர முடிகின்றது. இவ்வகையில் சமகாலத் தமிழிலக்கியப் பரப்பின் முக்கிய இணைப்புப் பாலங்களிலொன்றாக அது பயன்பட்டு நிற்பது தெளிவாகவே தெரிகின்றது. மேற்சுட்டிய வாறான அதன் இலக்கியப் பங்களிப்புத்திறன் மேலும் வலுப்பெற வேண்டும் என்பது எனது பெருவிருப்பமாகும்.
ஞானம் வாசகர்களுடன் எனது இலக்கியப் பார்வைகளையும் சிந்தனை யோட்டங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாள்களாகவே என்னுள் முளைவிட்டு முனைப்புற்று வந்தது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த எழுத்தாக்கச் செயற்பாடுகள் நிறைவுபெறும்வரை காலம் தாழ்த்திவந்தேன். இப்போ அப்பணிகள் நிறைவு பெற்றபின் உங்கள் முன் வருகிறேன். தமிழிலக்கியத்தின் சமகால இயங்கு நிலை - அதன் திசைவழிகளைத் தேடி...’ என்ற பொதுத் தலைப்பில் இன்றைய தமிழிலக்கியச் சூழல் தொடர்பான எனது பார்வைகளை உங்கள் முன் வைக்கும் முயற்சி இது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலப்பகுதியின் தமிழிலக்கிய வரலாற்றிலே, குறிப்பாக நூற்று முப்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நவீன தமிழிலக்கியத்தின் வரலாற்றிலே நாம் இன்று செயற்பட்டு நிற்கும் தளம் யாது? நாளை நாம் நடைபயிலவுள்ள திசைவழிகள் யாவை? முதலான வினாக்களை முன் வைத்து விடை தேடும் செயற்பாங்கில் எனது இச் சிந்தனைத் தொடர் அமையவுள்ளது.
இங்கே ‘தமிழிலக்கியத்தின் இயங்கு நிலை’ என்ற தொடர் அனைத்துலக நிலையிலான தமிழிலக்கியப் பரப்பைக் கருத்துட் கொண்டது என்பதை இங்கு சுட்ட வேண்டியது எனது முதற் கடமையாகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பரந்து வாழும் இன்றைய சூழலில் இத்தகு பார்வை தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. ‘பூகோளம் ஒரு கிராமம்’ (ழுடடியெட ஏடைடயபந) எனச் சுருங்கும் அளவுக்குத் தொடர்பு சாதனச் சூழல் செயற்பட்டு நிற்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ ஏதோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தின் குடிசையில் நிகழ்த்தப்படும் இலக்கியச் செயற்பாடானது உடனுக்குடன் அனைத்துலக மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய நிலை உளது. அதேபோல அனைத்துலக - புகலிடச் சூழல்களில் நிகழ்த்தப்படும் இலக்கியச் செயற்பாடுகளும் உடனுக்குடன் தமிழக, ஈழ இலக்கியவாதிகளை வந்தடையும் நிலையும், அவர்களிடம் உணர்வலைகளைத் தோற்றுவிக்கும் நிலையும் உளது. எனவே தமிழிலக்கியம் தொடர்பான எமது பார்வைகளும் பதிவுகளும் மேற்படி அனைத்துலகத் தமிழ்ச் சூழல்களையும் கருத்துட் கொண்டனவாக அமைய வேண்டியமை தவிர்க்க முடியாதது மட்டுமன்றி அவசியமானது கூட என்பதை உய்த்துணரலாம்.
சமகாலம் என்பது இங்கே குறிப்பாக 21ஆம் நூற்றாண்டின் ‘வைகறை’ யாகிய கடந்த ஐந்தாறு ஆண்டுகளைச் சுட்டிப் பயில்வதாகும். அதேவேளை அச்சொல் சற்று விரிந்த பொருளில் கடந்த ஒரு தலைமுறைக் காலப் பகுதியை (1980,90களின் காலப்பகுதியை) உள்ளடக்கி நிற்பதுமாகும். மேற்படி ஒரு தலைமுறைக் காலமானது தமிழிலக்கியச் சூழலில் மிக முக்கிய மாற்றங்கள் மற்றும் திருப்பங்கள் நிகழ்ந்த காலகட்டம் என்பது மனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். மேலே நோக்கியவாறு தமிழ் இயங்கு நிலையின் புவிப்பரப்பு விரிவடைந்த காலம் இது. தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர் என்ற நிலப்பரப்பு களைக் கடந்து வடதுருவம் மற்றும் தென்துருவம் என்பவற்றை எல்லைகளாகக் கொள்ளும் நிலை ஏற்பட்டது இக் காலப் பகுதியில்தான். ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வியல் சார்ந்த - வாழ்வுக்கான இருப்பை மையப்படுத்திய - புலம் பெயர்வுகளின் விளை பொருளான மாற்றம் இது என்பது யாவரும் அறிந்ததே.
மேற்படி காலப்பகுதியில் இலக்கிய நிலை யில் நிகழ்ந்துள்ள மிக முக்கிய திருப்பம் எனத் தக்கது புதிய திறனாய்வுக் கொள்கைகளின் வருகையும் அதன் தொடர்ச்சியாக இலக்கியச் சொல்லாடல்களிலும் படைப்புச் செயற்பாங்கு களிலும் நிகழ்ந்துள்ள புதிய போக்குகளுமாகும். குறிப்பாக, உள்ளடக்கமா? உருவமா? (அரசியலா? அல்லது அழகியலா?) என்ற வகையில் 50 - 70களில் நிகழ்ந்துவந்த விவாதங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘அமைப்பி யல்’, ‘பின் - அமைப்பியல்’, ‘பின் - நவீனத்துவம்’ எனப்படும் சிந்தனைப் போக்குகள் தமிழுக்கு அறிமுகமானதும் பரவலான கவனத்தை ஈர்த்ததும் மேற்படி ஒரு தலைமுறை (1980க்குப் பிற்பட்ட) கால கட்டத்தில் தான் என்பது மனங்கொள்ளப்படவேண்டியதாகும்.
மேற்சுட்டியவாறான அமைப்பியல் முதலிய சிந்தனைப் போக்குகளைத் தமிழ் இலக்கிய உலகம் எந்த அளவுக்குத் தெரிந்து தெளிந்துள்ளது என்பதில் விவாதத்துக்கு இடம் உளது. எனினும் சமகால இலக்கியப் படைப்பு முறைமையிலும் திறனாய்வுச் செயற்பாட்டிலும் அவை பெரும் செல்வாக்குச் செலுத்தி நிற்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறாக, புறநிலைச் சூழலான புவிப் பரப்புசார் விரிநிலையிலும் அகநிலைப் பட்டதான திறனாய்வு மற்றும் படைப்பாக்க முறைமை என்பன சார் புதுவரவு நிலையிலும் தமிழிலக்கியப் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் மற்றும் திருப்பங்கள் என்பவற்றின் வரலாற்றுத் தளத்தில் காலூன்றி நின்றுதான் தமிழிலக்கியத் தின் சமகால இயங்குநிலை, அது நடைபயிலும் திசைவழிகள் ஆகியன பற்றிய தேடல் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு நோக்க முற்படும் பொழுது சமகாலத் தமிழிலக்கியச் சூழல் தரும் பொது நிலைக் காட்சி தொடர்பான சில மனப் பதிவுகளை இங்கு முதற்கண் முன் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
1. சமகாலத் தமிழிலக்கியச் சூழல் -
ஒரு பொதுநிலைக் காட்சி
தமிழிலக்கியத்தின் கடந்த அரை நூற்றாண்டுக் கால வரலாற்றியக்கத்தை அருகிருந்து அவதானித்துவரும் ஒரு வாசகன் மற்றும் இலக்கியக் கல்வியாளன் என்ற வகையில் இன்றைய அதன் பொதுத் தோற்றத்தை - அதன் உலகளாவிய பரிமாணத்தைக் கண்டு மிக்க மனநிறைவு கொள்கிறேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். படைப்பு நிலையில் இன்று நிகழும் நூற்பெருக்கமும் அப் படைப்புகள் தொடர்பாகக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தும் களங்களாகத் திகழ்ந்து வரும் இலக்கிய இதழ் களின் பெருக்கமும் அவ்விதழ்களில் நிகழ்த்தப் பட்டுவரும் பல பரிமாணங்களைக் கொண்ட இலக்கிய விவாதங்களும் என்னைப் போன்ற இலக்கிய நேசிப்பாளர்களுக்குப் பெருவிருந்து களாக அமைவன என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன். அச்சிலும் இணையதளங்களிலும் பதிவாகிவரும் மேற்படி பெருந்தொகையான வரவுகளை முழுவதுமாகத் தரிசிக்க முடியாத - முழுமையாக அல்ல அதன் 5 அல்லது 10 வீதத்தைக் கூடக் கவனத்திற் கொள்ள முடியாத - நிலையிலேயே இன்றைய வாசகர் உலகம் உளது.
இலக்கியப் படைப்பு மற்றும் இலக்கியக் கல்வி, திறனாய்வு என்பவற்றையே தம் முழுநேரப் பணியாக - வாழ்க்கைக்கான தொழிலாகக் கொண்டவர்கள் கூடத் தத்தம் ஈடுபாடு, குழுச்சார்பு, இயக்கச்சார்பு என்பவற்றுக்கேற்ப சிற்சில ஆக்கங்களையும் அவைபற்றிய மதிப்பீடுகள் சார்ந்த எழுத்துக்களையுமே வாசிக்கின்றனர் என்பதே பொதுநிலை. கம்பன் சொன்னதுபோல ‘தோள்கண்டார் தோளே கண்டார்’ என்ற நிலைதான். விதிவிலக்காகச் சிலர் தம் பார்வையை அகலப்படுத்திச் செயற்பட்டு வரலாம் என்பதை நான் மறுக்க வில்லை. இங்கு நான் சுட்ட வந்த விடயம் இலக்கிய வாசகருக்கு மலைப்பு ஏற்படுத்தத் தக்க வகையில் இலக்கிய ஆக்கங்களும் அவைபற்றிய கருத்துப் பரிமாற்றத் தளங்களும் மிகப்பெரும் தோற்றத்தைக் தந்து நிற்கின்றன என்பதுதான்.
இவ்வாறான காட்சிப் பரிமாணத்தைப் பற்றி நான் இங்கு பேசும்பொழுது ஏறத்தாழ நாற்பதாண்டுகளின் முன்னர் - 1960களில் - நான் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த காலகட்டத் தமிழிலக்கியச் சூழல் நினைவில் மீள்வதைத் தவிர்க்க முடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் தமிழின் முக்கிய படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் 30 - 40 பேர்களே தேறுவார்கள் எனலாம். விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே திறனாய்வாளர்கள் தொகையும் அமைந்திருந்தது. இலக்கிய விமர்சனம் தொடர்பான இதழ்கள் என்ற வகையில் எழுத்து சரஸ்வதி, தாமரை, தீபம், கலைச்செல்வி மல்லிகை முதலிய 10 - 15 இதழ்கள் பற்றியே நாம் அன்று அறிந்திருந்தோம். ஒருவர் முனைந்து படித்தால் சில வாரங்களுக்குள் சமகாலத் தமிழிலக்கியம் பற்றிய ஒரு கருத்தாக்கத்தை - கணிப்பை - உருவாக்கிக் கொண்டு விட முடியும் என்ற நிலை அன்று நிலவியது. அந்த நிலையோடு ஒப்பிடும்போது இந்த நாற்பதாண்டுகளில் மிகப் பல மடங்கு விரிந்து பரந்துவிட்ட ஒரு இலக்கியச் சூழலில் நாம் வாழ்கிறோம் என்பது தெளிவாகவே தெரிகின்றது.
இந்த வளர்ச்சி நிலை வரலாற்றுப் போக்கில் இயல்பானதே எனினும் இதற்கான காரணிகளையும் இங்கு நினைவிற் கொள்வது அவசியமாகின்றது. ஒரு முக்கிய காரணி தமிழகத்தில் பரந்துபட்ட நிலையில் வெளிப்பட்ட சிற்றிதழ் எழுச்சி. சமுதாயச் சூழலின் அடிமட்டத்தில் கிளர்ந்தெழுந்த இலக்கிய முனைப்புக்கு வடிவமும் வனப்பும் தந்த பேரெழுச்சி இது. மற்றொரு முக்கிய காரணி ஈழத்தின் இனக் கொலைச் சூழலில் புலம் பெயர்ந்து புகலிடம் தேடிச் சென்ற தமிழர்கள் தங்களது அடையாளங்களைப் பேணும் நோக்கில் இலக்கியத்தை ஒரு முக்கிய தொடர்புசாதன மாகப் பேணிநின்ற - பேணிநிற்கும் நிலை. இந்த இரு காரணிகளும் இணைந்து செயற்படும் போக்கு இன்று தெளிவாகவே தெரிகின்றது. அச்சு மற்றும் கணிப்பொறி என்பவற்றின் அதிக பட்ச சாத்தியங்களை இச் செயற்பாடுகளில் நோக்க முடிகின்றது.
சமகால இலக்கியச் சூழல் தரும் பொதுக் காட்சி என்ற வகையில் அதுதரும் உலகளாவிய பரிமாணம் பற்றி மேலே நோக்கினோம். இது வெறும் எண்ணிகை அல்லது காட்சிப்பரப்பு சார்ந்த பெருக்கம் மட்டுமல்ல என்பதும் கருத்தாழமும் படைப்பாளுமையும் இணைந்த நிலையிலான வளர்ச்சியும் கூட என்பதையும் இங்கே மனங்கொள்வது அவசியமாகும். அதாவது படைப்பும் திறனாய்வும் ஒன்றோடொன்று கைகோத்து - ஒன்றையொன்று தூண்டிச் செயற்படுத்தி - மேற்கொள்ளும் பயணம் இது. படைப்புகள் வெளிப்பட்டவுடன் அதுபற்றிப் பலமட்டங்களில் நிகழும் கலந்துரையாடல்கள் படைப்பாளியைச் சுயவிமர்சனம் (சுயதரிசனம்) மேற்கொள்ளச் செய்கின்றன. இதனால் அவரது படைப்பாளுமை புதிய பரிமாணங்களை எய்த வாய்ப்பு ஏற்படுகின்றது. இது திறனாய்வுச் செயற்பாடுகளில் புதிய பரிமாணங்களைத் தோற்றுவிக்கின்றது. இவ்வகையில் இன்றைய படைப்பாளியொருவருக்கு இருக்கும் சுய விமர்சன வாய்ப்பு மற்றும் திறனாய்வுச் சூழல் என்பன தமிழின் நவீன இலக்கியத்தைத் தொடக்கி வைத்த பேராளுமைகளான பாரதி மற்றும் புதுமைப்பித்தன் முதலியவர்களுக்கு அமைந்திருக்கவில்லை என்பது நாம் நினைவில் இருத்த வேண்டிய ஒன்றாகும்.
பாரதி வாழ்ந்த காலத்தில் அவருடைய கவிதைகளை உடனுக்குடன் வாசிக்கவும் மதிப்பிடவும் வல்லதான சிந்தனைச்சூழல் அமைந்திருக்கவில்லை. வ. வே. சு. ஐயர், ஏ. வி. சுப்பிரமணிய ஐயர் முதலான சிலர் மட்டுமே பாரதி கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்தில் பதிவு செய்திருந்தனர். (பாரதி நிறைவுபெற்று ஐந்து ஆண்டுகளின் பின்னரே அவரது கவிதையாக்கங்கள் முழு நிலையில் தொகுத்து மதிப்பிடப்பட்டன என்பதும் அம் மதீப்பீட்டை மேற்கொண்ட முதல்வர் ஈழத்த வரான சுவாமி விபுலாநந்தரே என்பதும் இங்கு மனங்கொள்ளப்படவேண்டியன.) புதுமைப் பித்தன் வாழ்ந்த காலத்தில் அவர் சார்ந்தியங்கிய மணிக்கொடிச் சூழல் கருத்துப் பரிமாற்றத் துக்கும் சுயவிமர்சனத்துக்கும் வாய்ப்பளித் திருக்கும் என்பது வெளிப்படை. ஆயின் இன்றைய காலகட்டத்தில் இருப்பது போன்ற ஒரு விரிவான புதிய புதிய பார்வைகளைக் கொண்ட திறனாய்வுச் சூழல் அவருக்கு அமைந்திருக்கவில்லை என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டியது.
புதிய புதிய பார்வைகளைக் கொண்ட திறனாய்வுச் சூழல் என்பது நவீனத்துவம் மற்றும் பின் - நவீனத்துவம் என்பன சார்ந்த கருத்துப் பரிமாற்றச் சூழலையே இங்கு சுட்டி நிற்கின்றது. இக் கருத்தியல்கள் சார்ந்த பெருந் தொகையான அனைத்துலகப் படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்கள் கடந்த ஒரு தலை முறைக் காலப்பகுதியில் தமிழில் அறிமுக மாகியுள்ளனர் என்பதும் இன்றைய முன்னணி இலக்கிய இதழ்கள் பலவும் இவ்வகையினரைத் தமிழுக்கு இட்டுவருவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றன என்பதும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளாகும். இவ்வாறான செயற்பாடுகள் சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிசமைப்பன என்பதை விளக்க வேண்டியதில்லை.
இவ்வாறான அம்சங்கள் தமிழிலக்கியத் தின் சமகாலச் சூழல் பற்றிய பார்வையில் மன நிறைவைத் தருவன எனினும் இம் மனநிறைவு முழுமையான ஒன்றல்ல என்பதையும் இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது. இங்கு சுட்டப்பட்டவை இன்றைய இலக்கியச் சூழலின் ஒரு பகுதி - வளமான பகுதி-யின் காட்சிகளே யாகும். இச் சூழலுக்கு இன்னொரு காட்சிப் பரிமாணமும் உளது. அது, நாம் காண விரும்பாத - கண்டாலும் எடுத்துப் பேச விரும்பாத - பகுதி யாகும். பொதுவாக கலை மற்றும் இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் அவை ஆழமான ஆன்மநேயம் - குறிப்பாக மனிதநேயம் - சார்ந்தவை எனவும் அந்த நேய உணர்வினின்றே அவை பிறப்பெடுக்கின்றன என்றும் கூறுவர். இன்றைய தமிழிலக்கியச் சூழலில் மேற்படி கருத்து நிலை எந்த அளவுக்கு ஏற்புடையதாகிறது என்பது முக்கிய வினாவாக முன்னெழுந்து நிற்கிறது. சராசரி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மனிதப் பண்புகள் இல்லாதவர்கள் கூட இலக்கியப் படைப்பின் தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொண்டு இலக்கியத்தை ஒரு ‘பண்ட உற்பத்தி’யாக மேற்கொள்வதும் அவற்றைத் தரமான ஆக்கங்களாக இலக்கியச் சமூகம் ஏற்று விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கிக் கௌரவிப்பதும் கண் முன் நிகழும் காட்சிகள். இத்தகு நிலைமைகள்
முற்காலத்தில்லலாத வையல்ல. ஆனால் அந்நிலைமைகள் இன்று வளர்ச்சி பெற்றுள்ளன என்பதே நான் சுட்ட விழைவது.
இத்தொடர்பிலே கவனத்திற் கொள்ள வேண்டியதாகவுள்ள மற்றொரு அம்சம் இலக்கிய வாதிகளுக்குள் நிலவும் பூசல்கள் (குழுநிலை மோதல்கள்) ஆகும். நாம் இலக்கிய வாதிகள் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டியவை நிலை கூட நமது இலக்கியச் சூழல்களில் - சில இலக்கிய நிகழ்வுகளில் எழுத்தாளர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் நடந்து கொள்ளும் முறைகளில் - காணப்படு கின்றது.
நமது இலக்கியம் பற்றிய புரிதலில் எங்கே தவறு நிகழ்ந்தது?
(சிந்திப்போம்)
.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.