1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி. இந்த நாள் எனது வாழ்க்கையில் ஒரு திருநாள். அன்றுதான் இலங்கை வானொலி யிலிருந்து கடிதமொன்று கிடைத்தது. பகுதி நேர அறிவிப்பாளர் பதவிக்கென நடைபெற்ற நேர் முகப் பரீட்சையிற் சித்தியடைந்துள்ளதாகவும், குறிப்பிட்ட திகதியிற் பயிற்சிக்குச் சமுகமளிக்கு மாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டிருந்தார்.
வைத்தியர், ஆசிரியர், பொறியியலாளர் போன்ற பல தொழில்கள் உள்ள போதிலும், குறிப்பிட்ட ஒரு தொழிலில் இளைஞர்கள் நாட்டம் கொள்வது வழக்கமான விடயம் தான். அந்தத் தொழில் அவர்களுக்குக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் இளம் பருவத்தில் அவனுக்கிருந்த லட்சியக் கனவை மறுக்க முடியாது. அந்த வகையிற்தான் வானொலி அறிவிப்பாளர் பதவியை நான் விரும்பியிருந்தேன். அரைநூற்றாண்டு காலத் துக்கு முன்னர் இளைஞன் ஒருவன் மிகவும் அபூர்வமான வானொலி அறிவிப்பாளர் தொழிலை விரும்பியதற்கும் ஒரு பின்னணி இருக்க வேண்டுமல்லவா? இருக்கத்தான் செய்தது.
50 வருடங்களுக்கு முற்பட்ட காலம் கிராம போன் பெட்டிகளும், இசைத்தட்டுக்களுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்த சமயத்தில் - வானொலிக் கருவிகள் மிக அரிதாக கிராமத்தில் ஒன்று என்ற அடிப்படையில் காணப் பட்ட நேரம்.
குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் வருடாந்த மகாநாட்டின் போதுதான், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் - மாலை 6.00 - 8.00வரை “அகில இந்திய வானொலி நிகழ்ச்சி” எனக் குறிப்பிட்டிருந்தார்கள். மாலை 4.00 மணிக்கே அங்கு சென்று, ஏனைய நிகழ்ச்சி களையும் கவனித்து, மாலை 6.00 மணிவரை காத்திருந்து வானொலி ஒலிபரப்பை முதன்முதலாக கேட்ட நிகழ்வு, இன்றும் எனது மனதில் நிலைத்து நிற்கிறது. மகாநாட்டு பிரதிநிதிகளும், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மக்களும் அன்று அந்த வானொலி ஒலிபரப்பைக் கேட்டார்கள். அதிசயித்தார்கள்.
உரும்பராய் இந்துக் கல்லூரியில் படித்த காரணத்தினால், அந்தக் கிராமத்துடனான தொடர்புகள் அதிகரித்தன. வர்த்தக சமூகத் தினர் வாழ்ந்த - வாழும் ஊர் உரும்பராய். என்னோடு சேர்ந்து படித்த நண்பர் ஒருவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பத னால், அவர்களது வீட்டில் வானொலிக் கருவியை வைத்திருந்தார்கள். வீட்டிற்கு வெளியே வசதி யாக நின்ற 2 பனைமரங்களில் ஒலிவாங்கிக் கம்பியைத் தொடுத்து அதிலிருந்து வரும் கம்பியை வானொலிப் பெட்டியுடன் இணைத்து, கார் பட்டரி மூலம் வானொலிக் கருவி இயங்க வைக்கப்பட்டது.
குரும்பசிட்டியிலும் சரி, உரும்பராயிலும் சரி, வானொலியிலிருந்து இரைச்சல்கள்தான் கூடுதலாகக் கேட்டன. இருந்தாலும், பொறுமை யுடன் காத்திருந்து, செய்திகளைப் கேட்டோம். இசைக்கச்சேரிகள், நாடகங்களை ரசித்தோம்.
தகவல் தொழில்நுட்பம் கிராமங்களை சென்றடைய வேண்டுமென இப்போது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவது போல, அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் - உலக நாடுகளின் கலை, கலாசார, பொருளா தார, அரசியல் விடயங்கள் பற்றி கிராம மக்கள் அறிந்திருக்க வேண்டுமென அப்போதைய அரசாங்கங்கள் விரும்பின. இதற்கு வழி வகுக்கும் விதத்தில், கிராமங்களிலுள்ள சன சமூக நிலையங்களுக்கு - மின் விநியோகம் இல்லாத காலம் என்பதனால் - கார் பட்டரியில் இயங்கும் வானொலிப் பெட்டிகள் வழங்கப் பட்டன. மாதம் ஒருதடவை லொறி ஒன்றில் அதிகாரிகள் வந்து, பாவித்த பட்டரியை எடுத்துக் கொண்டு புதுப்பட்டரியை இணைத்துக் செல்வார்கள்.
இத்தகைய வானொலிக் கருவியை நாமும் பெற்றுவிட வேண்டும் என்ற அவா - இளைஞர் களான எம்மத்தியில் உதயமாகியது. வானொலிப் பெட்டியைப் பெறுவதனால், வாசிக சாலை, நூல் நிலையம், அதற்கான கட்டிடம் என்பனவற்றோடு சனசமூக நிலையம் இருக்க வேண்டுமே! அதற்கும் ஒரு வழி பிறந்தது.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் மகோன்னத பணியைப் பூர்த்தி செய்தவர் - புன்னாலைக் கட்டுவன், மகாவித்துவான் சி. கணேசையர் அவர்கள். அவரது ஞாபகார்த்தமாக ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலயத்துக் கருகில் அவரது உருவச்சிலை அமைக்கப் பட்டது. அங்குள்ள புராதனமான 2 கட்டிடங்களில் வாசிக சாலை, நூல் நிலையம் என்பன” “கணேச நூல் நிலையம்” என்ற பெயரில் இருந்து வந்தன.
கணேச நூல் நிலையம் என்ற பெயரை மாற்றி கணேச சன சமூக நிலையம் எனப் பெயரிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் வானொலிக் கருவியைப் பெறுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதிகாரிகள் குழுவினர் அங்குவந்து, வானொலிக் கருவி அரச சொத்தாக உள்ள தனால் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடிய அறை உள்ளதா? கிராம மக்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கக் கூடிய வசதிகள் இருக்கின்றனவா? என்பன பற்றியெல்லாம் அவதானித்து அறிக்கை சமர்ப்பித்ததும் ஒரு சுப வேளையில் - வானொலிக் கருவி எமது கிராமத்தை வந்தடைந்தது. மாலை 5 1/2 மணியிலிருந்து இரவு 9 1/2 மணிவரை ஒலிபரப் பான சகல வித நிகழ்ச்சிகளையும் இளைஞர் களாகிய நாமும், தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் விவசாயிகளும், கிராம மக்களும் ஒழுங்காகக் கேட்டோம். கிராம மக்கள் மத்தியில், உலக விவகாரங்கள் பற்றிய அறிவு கலா ரசனை என்பன அதிகரித்ததை மறுக்க முடியாது.
இந்தக் கால கட்டத்திலேதான் வானொலி யில் செய்தி வாசிப்பவர், நிகழ்ச்சி அறிவிப்பாளர், விமர்சகர், நேர்காணலை நடத்துவோர் போன்றவர்களின் செயற்பாடுகளில் ஓரளவு ஈடுபாடு ஏற்பட்டது. 1000 கணக்கான மைல் களுக்கப்பால், ஒரு சிறிய அறையில் ஒலி வாங்கியின் முன் அமர்ந்து கொண்டு அயல் நாடுகள் பலவற்றிலும், சொந்த நாட்டிலும் லட்சக் கணக்கான மக்களைக் கவரும் வகையில் அறிவிப்பாளர்கள் செய்து வரும் பணி மகோன்னதமாக தென்பட்டது. அவர்கள் செய்தியை வாசிப்பதில் இருந்த கம்பீரமும், தன் நம்பிக்கையும், நம்பகத்தன்மையும் பிரமிக்க வைத்தன. இசை நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதில் காண்பித்த கண்ணியம், ஈடுபாடு என்பன பெரிதும் கவர்ந்தன. நேர்காணலில் பங்குபற்றிய அறிஞருக்கு அளித்த கௌரவமும் சுருங்கச் சொல்லி அவரிடமிருந்து விடயங் களைப் பெற்றுக் கொண்ட பாங்கும் அதிசயிக்க வைத்தன. எந்த விடயமானாலும் அதனை தன் நம்பிக்கையுடனும் பண்புடனும் ரசிகர்களுக்கு அவற்றை வழங்கிய விதம் - “இவர்கள் சகல கலா வல்லுனர்களா?” என வியக்க வைத்தது. ஆம்! இவர்கள் சகல கலா வல்லுனர்கள் தான்!!@
குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வானொலி ஒலிபரப்பே பிரபல்யமடையாத அந்த நாட்களில் அறிவிப்பாளராக வருவது கானல் நீராக இருந்த போதிலும், அந்த எண்ணம் என் மனதைவிட்டு நீங்கவில்லை. தானும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ வைக்கும் இந்தச் சாம்ராஜ்யத்தினுள் எப்படியாவது புகுந்து விட வேண்டும் என்ற அவா மீண்டும் துளிர் விட்டது.
கொழும்பு வருமான வரி அலுவலகத்தில் எழுது வினைஞராக நியமனம் கிடைத்தும் வானொலி அறிவிப்பாளராக வருவதற்குரிய வழிவகைகள் பற்றிய தேடலே, முதலிடம் பெற்றது. அரசாங்க வர்த்தமானி, செய்திப் பத்திரிகைகள் என்பன ஒழுங்காகப் படிக்கப்பட்டன. அறிவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றனவா? எனக் கூர்ந்து அவதானிக்கப் பட்டது.
இந்தத் தருணத்திலே தான் “பகுதிநேர அறிவிப்பாளர்கள்” தேவை என்று இலங்கை வானொலி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டி ருந்தது. கடவுளே வரம் தந்த மாதிரி அந்த அறிவித்தல் கண்ணிற் பட்டதும், சகல விபரங் களுடனும் விண்ணப்பமொன்று அனுப்பப் பட்டது. தொடர்ந்து இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில், இயல், இசை, நாடகம், அரசியல், சமூகம், சமயல், சமகால விவகாரங்கள் உட்பட தரப்பட்ட துறைகளில் வினாக்களை தெரிவுச் சபை அங்கத்தவர்கள் கேட்டார்கள். மொழி பெயர்ப்புத் திறமை பற்றி அறிந்து கொண்டார் கள். அவர்களுக்கு சரிவர பதிலளித்ததைத் தொடர்ந்து, பகுதி நேர அறிவிப்பாளர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், பயிற்சிக்குச் சமுகமளிக்கும்படியும், ஆரம்பத்திற் குறிப்பிட்ட கடிதம் கிடைத்தது.
(தொடரும்)