“எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் தான் வாழ்க்கை” என - நான் அடிக்கடி எழுதியும் பேசியும் வந்துள்ளேன். எனது வெளிநாட்டுப் பயணங்கள் பல எதிர்பாராதவை.
இந்த ஆண்டு (2006) ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலி யாவில் நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் மாத்திரம் மூன்று மிருதங்க அரங்கேற்றங்கள் இருந்தன. அத்துடன் ஒரு நண்பரின் புதல்வியின் திருமணம். இந்நான்கு நிகழ்ச்சி களுக்கும் அழைப்பு வந்து, கலந்து கொள்வதாக உறுதியும் அளித்திருந்தேன்.
இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டம் மிக்க இக் கண்டத்தில் அழைப்புகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே வந்துவிடும். அழைப்பு கிடைத்தவர்கள் குறிப்பிட்ட திகதிக்குள் தமது வரவையும் தொலைபேசி ஊடாக உறுதிப்படுத்திவிட வேண்டும்.
“பிஸி”யான உலகில் வாழும் எம்மவர்க்கு பல வழிகளில் அதுதான் சௌகர்யம்.
தற்போது நிரந்தரவேலை எதுவும் இன்றி தற்காலிக வேலையில் இருக்கும் எனது தொழில் கடமைகள் இம்மாநிலத்திலிருக்கும் பிரமாண்டமான ஸ்ரேடியத்தில் அமைந்துள்ள உணவுச்சாலைகளில் தான்.
நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு ரசிகர்கள் கூடும் ஸ்ரேடியம் வி. ஐ. பி. க்கள் வரும் இடம். ஒரு நாள் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டனும் வந்திருந்தார். பாதுகாப்பு நிமித்தம் எமது உடமைகள் சோதனையிடப்பட்ட பொழுதுதான் அவரது வருகையே எமக்குத் தெரியும்.
இந்த ஆண்டு - பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் (Commonwealth Games 2006) அந்த குறிப்பிட்ட கூநடளவசய னுடிஅந ஸ்ரேடியத்திலும் நடந்தன. எனக்கும் ஓய்வற்ற வேலை.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த அரங்கேற்றங்களுக்காகவும் - திருமண வைபவத்திற்காகவும் முன்னேற்பாடாக விடுமுறை கேட்டு வைத்திருந்தேன்.
ஒரு நாள் காலை 8 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு. சிங்கப்பூரிலிருந்து மைத்துனர் விக்னேஸ்வரனின் குரல்.
“எனது மாமனார் காலமாகிவிட்டார்”
எனது மனைவியின் தந்தையார். இவர் ஒரு மருத்துவகலாநிதி. வயது எண்பதுக்கும் மேல். இலங்கையில் வடமராட்சியில் பிறந்தவர். தொழில் நிமித்தம் மாத்தளை, புத்தளம், நீர்கொழும்பு முதலான ஊர்களில் முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பிலிப்பைன்ஸில் தொழில் செய்யும் மகனிடம் சில தினங்கள் தங்கியிருந்து வருவதற்காக சிங்கப்பூரிலிருந்து அங்கு சென்றிருக்கிறார். மகன் தொழில் சம்பந்தப்பட்ட அலுவல்கள் காரணமாக அவசரமாக சிங்கப்பூர் வந்துள்ளார். விமானத்தில் சுமார் மூன்று மணி நேரப்பயணம்.
வந்தவர் தனது பணிகளை முடித்துக் கொண்டு திரும்புவதற்கிடையில் தந்தையார் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘சிபு’ என்ற தீவில் சம்பவம் நடந்துவிட்டது.
அந்தத் தீவில் மைத்துனருடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜைகளின் உறவினர்கள் பூதவுடலை ஆஸ்பத்திரியிலிருந்து பொறுப்பேற்றுக் கொண்டு சகல ஏற்பாடு களையும் செய்துவிட்டு எமது வரவுக்காக காத்திருக்கிறார்கள்.
மகன் புறப்படுவதற்கு முன்பு - எமக்கு தகவல் தரவும் - எனது மனைவி கதறி அழத் தொடங்கி விட்டார்.
ஒரு திங்கள் அதிகாலை மாமனாரின் உயிர் பிரிந்துள்ளது. சில மணி நேரங்களில் செய்தி சிங்கப்பூருக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் வந்து விட்டது.
எனது கடவுச்சீட்டை எடுத்துப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு அது காலாவதியாகி விட்டிருந்தது. மனைவியின் கடவுச்சீட்டு இலங்கைக்குரியது. பிலிப்பைன்ஸ் செல்வதாயின் மனைவிக்கு விசா எடுக்க வேண்டும்.
திங்களும் - வெள்ளியும் மாத்திரமே எமது மாநிலத்திலிருக்கும் பிலிப்பைன்ஸ் தூதரக கிளை அலுவலகம் திறந்திருக்கும். வெள்ளிக் கிழமை பெரிய வெள்ளி விடுமுறை தினம்.
சுமார் எட்டு மணி நேரத்தில் எனக்கும் புதிய கடவுச்சீட்டு புத்தகம் பெற்று - மனைவிக்கும் பிலிப்பைன்ஸ் விஸா எடுத்தேன். வேகமும் விவேகமும் துணை புரிந்தது.
மனித வாழ்வு - புத்தி கொள் முதலாகும்.
வாசகர்களுக்கு இந்த நிகழ்வை விபரிப்பது சுயபுராணம் பாடுவதற்காக அல்ல.
கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டால் - அதனை உரிய காலத்தில் புதுப்பித்துவிட வேண்டும். இயந்திர கதியில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த யுகத்தில் - எதனையும் நாளை... நாளை என்று ஒத்திவைத்தல் ஆபத்தானது.
சேக்ஷ்பியர் சொன்னார், “Tomorrow Never Come”
“நாளை என்பது வராது”. ஒவ்வொருவரதும் வாழ்க்கையிலிருந்துதான் மற்றவர்கள் பாடம் கற்க வேண்டும்.
கடவுச்சீட்டு புதுப்பித்து, விஸா பெற்று - விமான டிக்கட் எடுத்துக் கொண்டு, சுமார் 15 மணி நேரத்தில் பறந்து (இடையில் சிங்கப்பூரில் தரித்து விமானம் மாறி ஏறி, பிலிப்பைன்ஸில் ‘சிபு’ தீவினை வந்து அடையும் போது நடு இரவும் கடந்து அதிகாலை 2 மணியாகிவிட்டது.
அந்த அகால வேளையிலும் - எனது மாமனாரின் பூதவுடலை பார்த்து அஞ்சலி செலுத்தத்தக்க ஏற்பாடுகள் - இந்த ‘சிபு’ தீவில் ஒரு மரண சேவை நிலையத்தில் இருந்தன.
மைத்துனரின் தொழில் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் தொடர்ச்சியாக நித்திரை விழித்து எமது வருகைக்கு காத்திருந்தனர்.
தமிழ் மணமோ - தமிழ் முகமோ காணக்கிடையாத முற்றிலும் அந்நியமான ஒரு தீவில் சகல மரியாதைகளுடனும் இறுதிச் சடங்கிற்கு தயாராக இருந்தார் இலங்கையில் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவக் கலாநிதியான எனது மாமனார்.
இவரது மற்றுமொரு புதல்வி - முன்னாள் இலங்கைப் பத்திரிகையாளர் சூரியகுமாரி. இவர் செய்தி கேட்டு தனது 15 மாதக்குழந்தையுடன் துபாயிலிருந்து பறந்து வந்தார்.
நான், மனைவி, மைத்துனர், சூரியகுமாரி, குழந்தை இந்த ஐந்து தமிழ் முகங்களைத் தவிர - ஏனைய அனைவரும் இந்த தீவின் பிலிப்பைன்ஸ் வாசிகள் தான்.
இம்மரணச் சடங்கு எமக்கு எதிர்பாராத நிகழ்வு. இந்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கண்டு நெகிழ்ந்தே போனேன்.
ஒரு அந்நிய மனிதரை - தமது உற்ற சொந்தமாகக் கருதி - சகல மரியாதைகளும் வழங்கிய அந்த அன்புள்ளங்களை எப்படித்தான் மறக்க முடியும்.
கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் இந்த ‘சிபு’ தீவில் மாமனாரின் பூதவுடலை இந்து முறைப்படி தகனம் செய்ய முடியுமா என்ற கவலையுடன் மனைவி அழுதவாறே விமானத்தில் பயணித்தாள்.
ஆனால் - நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக பூதவுடலை தகனம் செய்வதற்கும் சகல ஏற்பாடு களையும் அந்த முகம் அறியாத அறிமுகம் இல்லாத மக்கள் செய்திருந்தனர்.
தகனத்திற்கு பூதவுடலை சேர்ப்பித்து விட்டு, வீடு திரும்பி குளித்து தோய்ந்த பின்பு - ‘அஸ்தி’ யை பெறுவதற்காக நாம் ஆயத்தமாகிக் கொண்டிருந்த பொழுது-
அந்தக் குடும்பத்தில் ஒரு 10 வயதுச் சிறுமி - அஸ்தி இருந்த அழகிய மரப்பெட்டகத்தை கொண்டு வந்து - ஒரு “பிஸ்கட் பெட்டியை” தருவது போன்று என்னிடம் தந்தார்.
இலங்கையில் இப்படியெல்லாம் நடக்குமா?
மாமனார் இறந்த காலப்பகுதி யேசு பிரானின் அந்திம கால நினைவுகளை உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் நினைவு கூரும் நாட்கள்.
பெரிய வியாழனன்று - அவர் தகனமானார். அந்த அன்புள்ளங்களின் இல்லத்தில் யேசுபிரானின் சிலுவைச் சிற்பத்திற்கு அருகே அந்த அஸ்தி இருந்த பெட்டகத்தை வைத்து இருமருங்கும் பூக்களையும் சுடர் விடும் மெழுகுவர்த்தி களையும் வைத்து அவர்கள் பிலிப்பைன்ஸ் மொழியில் பிரார்த்தனை செய்தனர்.
சுமார் எட்டு நாட்கள் - மாமனாரின் அஸ்திக்கு வீட்டினுள்ளேயே பிரார்த்தனை. அதனை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லும் வரையில் - வீட்டினுள்ளே இருக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றாக அந்தப் பெட்டகம்.
ஆயுதங்களைப் பெருக்கி - ஆதிக்க ஆணவத்தை வளர்த்துக் கொண்டியங்கும் அரசியல் சக்திகள் ஆக்கிரமிப்பு மனோபாவத்தி லிருந்து விடுபடாமல் - மனித நாகரீகத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் இந்த நூற்றாண்டிலும் - உலகெங்கும் மனித நேயம் மிக்க மக்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் - இவர்களிடம் இன - மத - மொழி - குல வேறுபாடுகள் இல்லை என்பதை - எனக்கு இந்த பிலிப்பைன்ஸ் பயணம் மீண்டும் உணர்த்தியது.
மானுடம்தான் எப்பொழுதும் வெற்றி பெறும்.