இலக்கிய வரலாற்றிலே மக்கள் இலக்கியம் படைத்த மேதைகளை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது வருங்கால இலக்கிய வளர்ச்சி நோக்குக்கு துணைபுரியும் என நம்பலாம். வங்காளத்தில் ஹுக்ளி மாவட்டத்தில் தேவானந்தபுரம் என்னும் சிற்றூரில் சரத் சந்திரர், மோதிலால் சட்டோ பாத்தியாயர். புவனமோகினி தேவியார் தம்பதியருக்கு இரண்டாவது பிள்ளையாக 1876ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம்திகதி பிறந்தார். இளமையில் வறுமையுடன் போராட வேண்டிய நிலையில் இருந்தார். சரத் சந்திரரின் தகப்பனாருக்கு குழந்தைகளின் மீது அதிக ஆசை. அவர்களுடன் சேர்ந்து ஆடுவதிலும், பாடுவதிலும் அவருக்கு மிகுந்த விருப்பம். யாரையும் அடிக்கவில்லை, திட்டவில்லை. இதனால் அவர் குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை. எனவே, சரத் சந்திரருக்குப் படிப்பைவிட ஆட்டத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. இதுபற்றி சரத் சந்திரர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“என் குழந்தைப் பருவ நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. மீன் பிடித்தலும், படகுகளைத் தள்ளுவதும், ஊரைச் சுற்றுவதும் தான் என் வேலை. எனக்கு படிப்பிலும் நாட்டம் செல்லவில்லை!”
சரத் சந்தரின் தாயார் பொறுமை அன்பு நிறைந்தவர். அவரைப் போலவே சரத் சந்தரும் அன்பின் வடிவமானவர். தேவானந்த புரத்திலிருந்தபோது பள்ளிக்கூடத்திற்கு சரியாகச் செல்லாத படியால் தாயார் மிகுந்த வருத்தப் பட்டார். பாகல்பூருக்குச் சென்ற பிறகு சரத் சந்திரர் கல்வியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தார். உடற் பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட இவர் பாடப்புத்தகங்களோடு நிற்காமல் பலதரப்பட்ட புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினார். பள்ளியில் முதலாண்டுத் தேர்வில் அவர் முதல்வராக வெற்றி பெற்றதால் அவருக்கு இரட்டை உயர்வு கிடைத்தது. பள்ளியின் நூல்நிலையத்திலிருந்து ஏராளமான நூல்களைப் பெற்று படித்தார். இதனால் சிறுவயதிலேயே இலக்கியத்தில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தார்.
இசையிலும் இருந்த நாட்டம் காரணமாக, சிறந்த வல்லுனராகப் புகழ்பெற்றிருந்த சுரேந்திரநாத் மஜும்தார் வீட்டில் சரத் சந்திரர் நாள் தோறும் பலமணி நேரத்தைக் கழித்தார். ராவ்பகதூர் அகோரபாபு அவர்களிடமும் அடிக்கடி சென்று பாடங்களைக் கற்று வந்தார். 1984இல் சரத்சந்திரர் நுழைவுப் பரீட்சையில் தேறி, பாகல்பூர் தேஜ் நாராயணன் ஜுபிஷி கல்லூரியில் ஏப். ஏ. வகுப்பில் சேர்ந்தார். ஆங்கில நாவல்களையும் அறிவியல் நூல்களையும் ஏராளமாக படிக்கத் தொடங்கினார். டிக்கன்ஸ், தேக்கரே, ஹென்றிவுட் சீமாட்டியார் ஆகியோரின் நாவல்களை மிகவும் ஆர்வத்துடன் படித்தார். ஹென்றிவுட் சீமாட்டியாரின் ‘கிஸ்டலீன்’ என்ற நாவலை ஆதாரமாகக் கொண்ட ‘அபிமான்’ என்ற வங்க நாவலை எழுதினார். மற்றும் சில தழுவல் நூல்களை எழுதிய போதிலும் எதையும் அச்சிலேற்ற முடியவில்லை. படிப்பில் மிகுந்த நாட்டமிருந்தது போலவே அவருக்கு கேளிக்கைகளிலும் ஆர்வம் குறையவில்லை. அத்துடன் பாட்டனாரின் வீட்டிலிருந்த பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார். ஏப். ஏ. முதலாண்டு தேர்வின் போது அறிவியல் பரீட்சை நடைபெற்ற முதல் நாள் இவர் இரவெல்லாம் கண்விழித்துப் படித்து நிறைய மார்க்குகளைப் பெற்றார். ஆசிரியர்கள் இவர் ‘கொப்பியடித்து’த்தான் மார்க்குகளை நிறையப் பெற்றார் என்று சந்தேகப்பட்டு மீண்டும் பரீட்சை எழுதச் சொன்னார்கள். அவர்கள் கேள்விகளுக்கு இவர் நேரடியாகவே விடை கொடுத்தது அவர்களுக்கு ஆச்சரியம். மறையும்வரை ஞாபகசக்தி மிக்கவராகவே திகழ்ந்தார்.
படிக்கும் காலத்தில் சரத்சந்திரருக்கு இலக்கியத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. அத்துடன் தாய்மொழிப் பற்றும் அதிகமாகவே இருந்தது. அந்தக் காலத்தில் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதிவந்தனர். ஆனால் இவரோ தன்கடிதங்களை வங்க மொழியில் எழுதியதோடு நிற்காமல் மற்றவர்களையும் தாய்மொழியிலே எழுதுமாறு வற்புறுத்தி வந்தார். அவரது வங்கமொழிப் பற்றுக் காரணமாக ‘குழந்தை’ என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் நடத்தி வந்தார். சரத் சந்திரரையும் அவரது உயர் நண்பரான ராஜாவையும் நாடகங்கள் பெரிதும் கவர்ந்தன. அவர்களிருவரும் தங்கள் இனிய குரலாலும், நடிப்பாலும் மக்களைக் கவர்ந்தனர்.
அன்புள்ளம் கொண்ட சரத்சந்திரர் அக்கம் பக்கத்தாரின் காரியங்களில் பெரிதும் துணைபுரிந்து வந்தார். பிறர் துன்பத்தை காணச் சகிக்காத நல்லெண்ணம் கொண்டவராக விளங்கினார். ஏப். ஏ. பரீட்சைத் தேர்வுக்கு இருபது ரூபா கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் அவர் தன் கல்லூரி வாழ்க்கைக்கு தலைமுழுக்குப் போட்டுவிட்டார்.
பிகாரில் இருந்த காலத்தில் ‘பிரம்மதைத்தியம்’ என்னும் நாவலை எழுதினார். 1903இல் தகப்பனார் இறந்ததும், கையில் காசில்லாத நிலையில் தன் ஒரே சொத்தான சைக்கிளை விற்று தகப்பனாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். தந்தை இறப்புக்குப் பின் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுரத்சந்திரர் பிழைப்புக்காக கல்கத்தாவுக்குச் சென்றார். கல்கத்தாவில் ஒரு வழக்கறிஞரிடம் சேர்ந்து இந்தி மொழிக் கடிதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வேலையை மேற்கொண்டார். பின்னர் அந்த வேலையை விட்டு ஊருக்கு திரும்பினார். அந்த நேரத்தில் அவரது இலக்கியத் திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. வங்க மொழியில் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. ‘மந்திர்’ என்ற கதையை எழுதி அரேந்திரநாத கங்கோபாத்தியார் பெயரில் போட்டிக்கு அனுப்பி வைத்தார். போட்டிக்கு வந்த 150 கதைகளில் அது முதற்பரிசான ரூபா 25.00யைப் பெற்றது.
வறுமையின் காரணமாக, பிழைப்புக்கு வழிதேடி தனது 27வது வயதில் சரத் சந்திரர் இரங்கூனுக்குக் கப்பலேறினார். பர்மிய மண்ணில் கால்வைத்தபோது அவரிடம் இரண்டு ரூபா மட்டுமே இருந்தது. வேலை தேடிவந்தவருக்கு இரங்கூனிலிருந்த சிறிய தந்தையார் இயற்கை எய்தியமையால் பயனற்றுப்போய்விட்டது. பர்மிய மொழிப் பயற்சி அவருக்கு பெரும் துணைபுரிந்தது.
இசையின் மூலம் மணீந்திர குமார மித்திரர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மித்திரருக்கு இலக்கியத்திலும் ஈடுபாடு இருந்தமையால் அவருடைய நூல் நிலையத்தில் சரத் சந்திரர் அறிவியல் தத்துவ நூல்களை ஏராளமாகப் படித்தார். அதே வேளை வங்காளிகளின் கழகத்தில் இவர் பெரிய இசை வல்லுனராகத் திகழ்ந்தார். அந்தக் கழகத்தினர் சந்திர சென் என்ற வங்கக் கவிஞருக்கு வரவேற்பு விழா நடாத்தினர். அவ்விழாவில் சரத் சந்தர் பாடினார். இதைக்கேட்ட கவிஞர் சரத் சந்திரருக்கு ‘இரங்கூன் இரத்தினம்’ என்ற விருது வழங்கிக் கௌரவித்தார்.
கல்கத்தாவுக்கு தன் மனைவி இரண்மயீ தேவியுடன் வந்து சேர்ந்த சரத் சந்தர் தான் எழுதிய ஆக்கங்களையெல்லாம் ஒரு நண்பரிடம் கொடுத்துவிட்டு பர்மாவுக்கு மீண்டும் சென்றுவிட்டார். அந்த நண்பர் இவரது கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். ‘பாரதி’ என்ற பத்திரிகையில் ‘படதீதீ’ என்ற கதை வெளிவந்தது. ‘யமுனை’ ஆசிரியரின் வற்புறுத் தலினால் ‘பிந்தூர் சேலே’ போன்ற சிறந்த கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. 1938இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தார் ‘பிந்தூர் சேலே’யை பாடப் புத்தகமாக அங்கீகரித்தனர். அவருடைய கதைகளில் முதன் முதலாக நூல் உருவில் ‘படதீதீ’ வெளிவந்தது.
திரும்பவும் கல்கத்தா வந்து ‘பாரதவர்ஷ’ பத்திரிகைக்கு தொடர்ந்து கதை எழுதும் பணிக்கு மாதாமாதம் நூறு ரூபா பெற்றுக்கொண்டு கதைகளை எழுதிவந்தார். வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடாமல் வாழ்நாள் முழுவதும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். அக்காலகட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ், பி. சி. ராய் போன்ற பெருந் தலைவர்களையெல்லாம் அவர் மிகவும் போற்றினார். காந்தியடிகளுடனும், இரவீந்திரருடனும் கருத்துக்களில் பல தடவைகள் மாறுபட்டிருந்தார்.
1929இல் ஒரே நாளில் இளைஞர் மாநாடு, வங்க இலக்கிய மாநாடு இரண்டுக்கும் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். இளைஞர் மாநாட்டுக்கே அவர் தலைமை தாங்கி இளைஞர் எழுச்சி குறித்து சொற்பொழிவாற்றும் போது... “நம் வீழ்ச்சிக்குக் காரணங்கள் நம்மிடையே யுள்ள சாதிப்பிரிவுகள், சமூகக் கொடுமைகள், அன்பில்லாத மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம்” என்று ஆணித்தரமாக எடுத்தியம்பினார். ‘பதேர்தாபி’ யில் சரத் சந்திரரின் உரிமை வேட்கையான சமூக அரசியல் கருத்துக்களைக் காணலாம்.
“பழமை சிறப்புடையதானாலும், அதை பழமையாகவே எண்ண வேண்டும். அதில் மயங்கி விடாமல் எதிர்காலத்தில் நாட்டம் செலுத்துவதே இளமையின் இலக்கணம்” என்று தெளிவுபடுத்தியவர் சரத் சந்திரர். மேலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளையும் எழுதினார். காந்தீயம், இந்து முஸ்லீம் பிரச்சனை, சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு, இளைஞர் எழுச்சி போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை வரைந்தார். இதனால் அவர் புகழ் வளர்ந்தது. ஆனால் பத்தாம் பசலி பழமை வாதிகள் அவர் மதத்தை அழிப்பதாக ஓலமிட்டனர்.
ரவீந்திரருக்கு அடுத்தபடியாக வங்க இலக்கிய ஆசிரியர்களிடையே இவர்தான் அதிகம் போற்றப்பட்டுள்ளார். அவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. கல்கத்தா, டாக்கா பல்கலைக் கழகங்கள் அவருக்குப் பட்டமளித்துப் பெருமைப்படுத்தின. 1933இல் கல்கத்தா மக்கள் அவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை நடத்திக் கௌரவித்தனர்.
வங்கப் பெண்கள் விடுதலைக்கும், எழுச்சிக்கும் அவரது எழுத்துக்கள் மிகவும் பயன்பட்டதால் பெண்கள் அவரைத் தங்கள் விடுதலை வீரராகப் போற்றினர்.
1938ஆம் ஆண்டு - நோய்வாய்பட்டிருந்த சரத் சந்திரர் என்ற எழுத்தாளர் சமுக சிந்தனையாளர் ஜனவரி 16ஆம் திகதி இயற்கையெய்தினார். கல்கத்தா இருளில், துக்கத்தில் மூழ்கிவிட்டது. பெருந்தலைவர்கள் பலர் தங்கள் இறுதி வணக்கத்தைச் செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சரத் சந்திரர் இலக்கியத்தில் மட்டுமன்றி நாட்டுப்பற்றிலும், சமூகத்தொண்டிலும் தலைசிறந்து விளங்கினார்.
சரத் சந்தரின் இலக்கியம் உயிர்த் துடிப்புடன் அமைந்திருப்பதற்குக் காரணம், அவர் தனது சொந்த அனுபவங்களையும், நண்பர்களின் வாழ்க்கை அம்சங்களையும் தனது இலக்கியத்தின் மூலம் தந்ததால் தான். அவரது இலக்கியத்தில் வரும் பாத்திரங்களும் கதைப் பொருளும் கற்பனையானவையல்ல. அவை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவை, பழக்கப்பட்டவை. அதனால்தான் சரத் சந்திரரின் பாத்திரங்கள் நரம்பு, சதையுடன் கூடிய உண்மை மனிதர்களாக நமக்குக் காணப்படுகிறார்கள்.
சரத் சந்திரர் ‘சுபத’, ‘தேவதாஸ்’, ‘ஸ்ரீ காந்தன்’, ‘சரித்திரஹின்’, ‘கிருகதகம்’, ‘தத்த’ என்ற நாவல்களில் தன் வாழ்க்கை நண்பர்களை, தான் வசித்த இடங்களை, தன் சொந்த அனுபவங்களைத் தன் எழுத்துக்களால் படம் பிடித்துக் காட்டுகின்றார். ‘ஸ்ரீ காந்தன்’ பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரான்சில் நல்ல பெயரெடுத்தது. இலக்கியத்தையே தன் பிழைப்புக்கு வழியாக அவர் ஏற்றது அந்த நாளில் பெரும் புரட்சியாகும். ‘பதேர் தாபி’ என்ற அவரது நாவல் வெளியான முதல் நாளிலேயே 1000 பிரதிகள் விற்றுவிட்டன. முதல் பதிப்பான 3000 பிரதிகள் ஒரே மாதத்தில் தீர்ந்துவிட்டன. இரண்டாம் பதிப்பான 5000 பிரதிகள் மூன்றுமாதத்தில் விற்றாகிவிட்டன. இத்தாலி, ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டியது போல் வங்கம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இந்திய மறுமலர்ச்சிக்கு வழிகாட்டியது. அத்தகைய வங்கத்தில் தோன்றிய சரத் சந்திரர் நாவல்களுக்கு புது வாழ்வளித்தார். காலவெள்ளம், உரிமைக்குரல், புதுவாழ்வு, பைரவி, இருளில் ஒளி, விராஜ்குமாரி, பார்வதி, புதுமணப் பெண், சந்திரநாத், ரமா, வைகுந்தன் உயில், ஜமிந்தாரணி, அசலா, ஞானதா, சரத்சந்திரர் கதைகள் ஆகிய நூல்கள் வங்க மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. அத்தனை கதைகளும் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. வளரும் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை வாசிப்பதன் மூலம் எழுத்துத் துறையில் உத்வேகம் கொண்டவர்களாக உருவாகுவார்கள். சரத் சந்திரர் பற்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் கூறிய கருத்துக்கள்... “அவர் இலட்சிய எழுத்தாளர் மட்டுமல்ல, இலட்சிய தேசபக்தரும் கூட. அது மட்டுமல்ல அவர் இலட்சிய மனிதராவர். இத்தனை சிறப்புகளையும் ஒரே ஆளிடம் காண்பது அரிது”
என்னே அவர் தீர்க்க தரிசனம்.
சரத் சந்திரர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
“இன்பத்திலும், துன்பத்திலும், சந்திப்பிலும், பிரிவிலும், சுழன்றுவரும் இயற்கை விசித்திரத்தை அவர் வங்காளிகளுக்கு நன்றாக எடுத்துக்காட்டினார். வங்க மக்களின் நிலைத்த மகிழ்ச்சியே இதற்கு எடுத்துக்காட்டு. வேறு எந்த எழுத்தாளரும் இந்தத் திருப்தியை அளிக்கவில்லை. சரத் சந்திரரைப் போல் எவருமே அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளை கொள்ளவில்லை” என்று தாகூர் புகழாரம் சூட்டியுள்ளார்.