அம்மா......
அன்பின் திருவுருவே!
என் சலங்கைகளில்
கோர்ப்பதற்காய் - நீ
சேர்த்து வைத்த பரல்கள்
ஒவ்வொன்றும்
உன்னதம் தான்
நானறிவேன்...
எத்தேச வாசியானால் என்ன
உன் வயிற்றில் பிறந்துவிட்டு
எப்படிச் சொல்வேன்? - நான்
பிறதேச வாசியென?
நீ சொன்ன
வெண்மணல் வெளிகள் பற்றி
விரிந்து நீளும்
வேனில் பற்றி...
எதுவுமே தெரியாதுதான்
ஆயினும்
நுனிநாக்கில் ஆங்கிலமும்
தூதனமாய் ஆடைகளும்
இந்நாட்டுக் கலாசாரம்
எம் நாட்டை வென்றிடுமா?
ஆடம்பர வாழ்வுதான்
தேடற்கரிய செல்வமாய் |
ஆனந்தம், நிம்மதி
இங்கே கிடைத்திடுமா?
பதினெட்டு வயதானால்
பற்றறுத்துச் செல்கின்ற
புதுத்துறவி போல
மனம் போன போக்கில்
தினமொரு துணையுடன்
தனியான வாழ்க்கை
இப்படியா வளர்த்தது
உன்னை என் தாயின் நாடு
சீச்சீ புளிக்கிறது
பசிக்காக அல்லாது
ருசிக்காக உணவும்
பார்வைக்கு ஏதோ
குளிர்ச்சியான இடமும்
மாற்றாது உன்மகளை
எப்போதும் என் காலில்
உன் சலங்கை சத்தமிடும்
நீ சொன்ன அதே
சுயத்தோடும்
சிறப்போடும்...
ஆகவே பயப்படாதே
வெல்லப் போவது
என்தாய் உன்
கனவு மட்டும் தான்...! |