காலிலே சலங்கை கட்டி
மேடையிலே ஆடிடுவோம்
கரகாட்டம் கும்மியென்று
கை கொட்டிப் பாடிடுவோம்
காமன் கலைதனையும்
காத்தவராயன் கூத்தினையும்
பொன்னர் சங்கருடன்
போற்றிப் புகழ்ந்திடுவோம்
அர்ஜுனன் தவசுடனே
அலுக்குச் சட்டி - ஒப்பாரி
உடுக்கு - உருமி
தம்பு - தமருடன்
மாரியம்மா குரலிப்பாட்டை
மனம் மகிழ்ந்து பாடிடுவோம்
பிரட்டுச் சங்கையூதி
முரசுக் கொட்டிச் சொல்லிடுவோம்
காவடி கோலாட்டம்
குச்சிப்புடியாடி
தாலாட்டு தெம்மாங்கு
வில்லுப்பாட்டைப்பாடி
|
|
வடமோடி தென்மோடி
ஆரவள்ளி சூரவள்ளி
கோவலன் கூத்தாடி
அரிச்சந்திரா பவளக்கொடி
பாஞ்சாலி சபதத்துடன்
நாதம் ஒலித்திட
மேளம் முழங்கிட
மயிலாட்டம் ஒயிலாட்டம்
குயிலாட்டம் - பாடி
வள்ளி திருமணத்தை
சின்ன மேள நர்த்தனமாடி
சிறப்பாய்க் கொண்டாடிடுவோம்
சிலம்படி - மோடி வித்தை
கலைக் கூத்தாடி
ஜல்லிக் கட்டு காளையுடன்
மல்லுக்கட்டி விளையாடிடுவோம்
வாசலிலே வண்ண
கோலமிட்டு தைமகளின்
வரவையெண்ணி தாளமிட்டு
நாட்டார் பாடல் தனை நாமினிதாய்
பாடிடுவோம்.
குடு குடுப்பைகாரனுடன்
குருவிச்சி நாச்சியாரை
கூப்பிட்டு, நம்கலைகள்
வருங்கால சந்ததிக்கும்
வளமுடனே, பயிற்றிவோம்
முத்தமிழை வளர்த்திடுவோம் |