பனிதுயில் புல்நுனி
மனிதனை அளக்கும்
பொய்வலை விரிப்பின்
மெய் பல மடியும்
மீன் எறி தூண்டிலின்
தீன் சுவை கொடிது
நெல்பல பொலிய
நல்லவை இயலும்
பகை தணி வாழ்க்கை
தகை மிகு சேர்க்கை
ஈரம் கூர
வேரும் ஊரும்
அடங்கிய மனசு
புடம்படும் இனிது
புனை புகழ் மகிழான்
தனை அவன் இகழான்
வறுமை சிறுமை
வலிமை களையும்
நல்லோர் நாடிச்
செல்வார் வெல்வர்
கடன் படான் வாழ்வில்
கவலைக் கிடம் கொடான்
தீயுறு மெழுகாம்
தாயுறு துயரம்
தன் சொல் உணர்ந்தார்
மேனி பொன் புனைந்தார்
சிறையழி புதுப்புனல்
நிறையளி செய்யும்
நலம் பெறு சுடர்நுதல்
நலம் பெறத் துலங்கும்
|
வெண்ணெய்த் தண்மை
உண்மைப் பெண்மை
துஞ்சு மனை கெடு
நஞ்சுக் கிருப்பிடம்
ஞாயிறு கதிரொளி
நீயிர் மறைப்பிரோ!
தன்னை அளந்தவன்
பொன்னில் உயர்ந்தவன்
தன்சொல் உணரின்
இன்சொல் வளரும்
ஒழுகு மதியார்
பழக விதியார்
தேனூர் வாழ்க்கை
திண் திறல் யாக்கை
மையல் நெஞ்சம்
ஐயம் தீரா
நல்லார் நாடிச்
செல்வார் வதுவை
கன்னி விடியல்
கவிதைக் குவியல்
சூதார் செயினும்
சாதனை இழப்பர்
விரிமலர்த் தாது
வண்டுக்குத் தூது
மீன்பிடி நாரை
தான் படும் தீர்வை
பசு மலர் வண்டுப்
பாரம் சுமக்கும்
குழவிக் கூறு முலையால்
கிளவிக் கூறு கவியால்
|