நூலைக் கையில் எடுத்ததும் நூலின் பெயரை வாசித்தேன் “சுனாமி சொல்லாத சோகங்கள்!” என்று இருந்தது. சுனாமி சொன்ன சோகங்களைத்தான் நான் உண்மையில் கண்டுள்ளேன். இவர் சுனாமி சொல்லாத சோகங்கள் கூறமுனைந்துள்ளாரே! அது எப்படி இருக்கும் என்ற ஆவலுடன் அட்டை யின் பின் பக்கத்தைத் திருப்பினேன் விடை காணும் ஆவலில். “மானிடத்திற்கும் இயற்கைக்குமான பிணைப்பின் பிறழ்வு வரலாற்று நிகழ்வு. ஆழிப் பேரலை எமது நினைவில் நெடியகால நிலை வடு. மகப்பேற்றின் வேதனை இயற்கையின் உள்ளீடு. ஆனால் மனிதத்தின் கொடுமுடியான உறவுகளை இழந்தவர்களின் மன நோயின் ஆழமான துன்பியலுக்கு யார்விடை காண்பர்? இவை அனைத்துமே சொல்லாமல் சொல்லும் ‘சுனாமி சொல்லாத சோகங்களில் “இளையோடு கின்றன” என்ற அருள்கலாநிதி அ. பி. யெயசேகரம் அவர்கள் வெளிக் கொணர்ந் துள்ளார். சற்று நிதானத்துடன் பேராசிரியர் என். சண்முகலிங்கனின் அறிமுகத்தைப் பார்க்கின்றேன். “வெறும் அனுபவப் பதிவாக அல்லாமல் உள சமூகவியல் பகுப்பாய்வாகவும் அமையும் இந்நூல் சுனாமி அனர்த்தத்தில் அல்லாடிப்போன மனிதர்களாக - மனிதத்தை மீட்பதில் காப்பதில் கைகொடுக்கும் கைவிளக் காக எமக்கு வாய்த்துள்ளதெனலாம்.” இப் பொழுது நூல் ஆசிரியரின் நோக்கம் புலனாகி விட்டது. “மரணித்த மனிதர்களின் சார்பில் மனிதம் வாழ வழிசமையுங்கள்” என்ற ‘மனிதம் வாழ’ என்று கூற்று மனங்கொள்ளத்தக்கது.
2004, டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கைத் திருநாட்டின் கடற்கரைப் பகுதிகளைக் கலங் கடித்த ‘சுனாமி’ என்னும் ஆழிப்பேரலையின் அனர்த்தச் சுவடுகள் நீண்டகாலத்திற்கு அழியாத சுவடுகளாகிவிட்டன. சுனாமியால் இழந்த உயிர்களை மீட்க முடியாது. அழிந்த சொத்துக்களை ஆக்கமுடியாது. ஆனால் தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வையாவது மீட்டுக் கொடுக்கவேண்டியது மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருடைய கடமையாகும். உடல் உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சூன்யமாகவே உள்ளது. இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் மனத்தைத் தேற்றுவதற்கும், வாழ்க்கையில் பிடிப்பை ஊட்டுவதற்கும் உளவியல் ரீதியான அணுகுமுறைகள் பெருமளவு மேற்கொள்ளப் படுகின்றன. மக்கள் அனுபவித்த துயரங்களை, மனநிலைப் பாதிப்புக் களை எல்லாம் பொறுத்துக் கொண்டு, இடைத்தங்கல் முகாங்களில் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி, குடிக்க நல்ல நீர் இன்றி, படுக்க இடமின்றிப் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களைச் சென்று பார்த்ததன் விளைவாக மனத்தில் ஏற்பட்ட தாக்கம் - அதன் பிரதிபலிப்புக்கள் பொறுக்கமுடியாத சோகம் இதை நூலாகவடித்துவிட வேண்டுமென்ற ஆதங்கம் எல்லாவற்றின் கூட்டு மொத்தமே அருட்தந்தை அன்பு அவர்களின் “சுனாமி சொல்லாத சோகங்கள்!” துயரப்படும் மக்களுக்காகத் துடிக்கின்ற அவர் உள்ளத்தின் மேன்மையை ‘காலத்தின் பதிவுகள்’ ஆகக் கண்டோம். இப்பொழுது சுனாமி அனர்த்த களங்களில் துயரிடை கலந்த அவரின் அனுபவ வாக்கு மூலமாக இந்த நூலின் வரவு அமைந்துள்ளது. “அனுபவங்களை ஆவணப் படுத்துவதுதான் அடுத்த சந்ததிக்கு ஆதாரமாக இருக்கும் என்பது அசைக்க முடியாது நம்பிக்கை.” என்று வாழ்த்துரையில் அகளங்கன் அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கமோ, அரச அதிகாரிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் உண்மையான செயலூக்கப்பாடு காட்டத் தவறியமையே - மக்களின் துயரங்கள் துயரங்களாகவே உள்ளன. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான உணர்வலைகள் பீறிட்டு எழுகின்ற பொழுதுதான் இதய சுக்தியான செயற்பாடுகள் காலதாமதமின்றி நடைமுறைப் படுத்தப்பட முடியும். நிவாரணப் பணிகளில் அரசியல் வாதிகளின் தலையீடு, உயர் அதிகாரிகளின் அசமந்தப் போக்குக் காரணமாக சுனாமி வந்து 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் சொல்லாத சோகங்கள் நிலைந்துவிட்டன.
“இக்காலப்பகுதியில் பலரைச் சந்தித் தேன். திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் இந்நாட்களைக் கழித்தேன். துன்பியல் வழியாக வாழ்வியலுக்கான உண்மை களை அறிந்துகொண்டேன். துன்பியலின் உச்ச நிலையை உணர்ந்தேன். இந்த வரலாறுகளை இலகுவாக நாம் மறந்துவிடக் கூடாது; மறந்து விடவும் முடியாது என்பதால் இவற்றை வைத்து இந்த நூலை எழுதத்துணிந்தேன்”. என்று என்னுரையில் நூலாசிரியர் தெளிவுபடுத்தி யுள்ளார்.
‘கடலன்னை மானிடத்திற்கு வரைந்த மடல்’ என்ற முதற்கவிதையும், ‘அனுபவத்தை ஆரம்பிக்கும் முன்...’ ‘ரைடல் உவேஸ் சோ, கடல் கோளோ அல்ல சுனாமி’, ‘களத்தில் கண்டவை’, ‘சிறுவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும்’, ‘பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவற்றுக் கான தீர்வுகளும்’, ‘சுனாமி புகட்டும் போதனை’ ஆகிய பயனுள்ள கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் “நம்பிக்கையின் பாதையில்” என்னும் நூலையும் ஆக்கியுள்ளார். தொடரட்டும் அவரது மனிதநேயப் பணி
-திருமல;ை சிவா