ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரி யாக கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்து அனுபவ முத்திரைபதித்த திரு. ச. அருளானந்தம் அவர்கள் இளம் பிஞ்சுகளின் உள்ளக் கிடக்கை களை நன்கு அறிந்தவர். அதன் காரணமாகச் சிறுவர் இலக்கியங்களைப் படைப்பதில் ஆர்வம் கொண்டு முழுமூச்சுடன் ஈடுபட்டார். “சிறுவர் இலக்கியத்தில் அவரது பணி தனித்து வமானது. அவரது மூன்று சிறுவர் இலக்கிய நூல்கள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றுள்ளன. கலாபூஷணம் விருதினைப் பெற்றுள்ள திரு. ச. அருளானந்தம் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஐந்து சிறுவர் நாவல்களையும் வெளியிட்டுள்ளார். ‘பயங்கொள்ளலாகாது பாப்பா’ சிறுவர் நாவல் அகில இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. சிறுவர்களுக்கான கதைகளையும், எட்டு சிறுவர் பாடல் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் ‘காகமும் தம்பியும்’ ‘மனதுக்கினிய பாட்டு’ மாநில சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுள்ளன. இவரது சிறுவர் பாடல் நூல்கள் தனித்துவமானவை. அருமையானவை., சின்னச் சின்ன சொற்கள், அந்தச் சொற்களின் துடிப்பு, துடிப்பிலே துள்ளிவரும் சத்தம், அந்தச் சத்தத்தின் இனிமையிலே துள்ளுகின்ற கருத்துக்கள், படிப்பினை ஆகியவற்றை இவர்களது பாடல்களில் காணலாம் என்று அறிமுக உரையில் திரு. க. தங்கராஜா தெளிவுபடுத்தி யுள்ளார். ‘சகோதரராய் வாழ்வோம்’ என்ற மகுடத்தில் இன ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையிலும் மற்றும் பல்துறை சார்ந்த விடயங் களையும் உள்ளடக்கி சிறுவருக்கான கருத்துப் பாடல்களைக் கொண்ட நூலாக இத் தொகுதியை யாத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இந்நூலில் 94 பாடல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தினைக் கூறியிருப் பதை அவதானிக்க முடிகின்றது. பாடுவோமே! பாட்டுப் பாடுவோமே! என்று சிறுவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து நிற்கக் கூடிய வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. ஓசை நயம், சந்தம் கையாளப் பட்டிருக்கும் அழகு மனத்தில் ஒரு உற்சாகக் கிளர்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் தன்மனத் தேட்டத்தை வெளிக்கொணர்ந்து வெற்றியும் கண்டுள்ளார் ஆசிரியர்.
“கிராமத்திலே பிறந்து, கிராமியக் காற்றினைச் சுவாசித்துத் தான் கண்டு கொண்ட, அனுபவித்த அத்தனை விடயங்களை யும், காட்சிகளையும் உள்வாங்கிப் பல சிறுவர் இலக்கியங்களைப் படைத்துள்ளார். ‘சகோதரராய் வாழ்வோம்” என்ற இந்த நூலில் பொதிந்துள்ள விடயங்கள் பொருள் நிறைந்தனவையாகவும், விளக்க பூர்வமானவையாகவும் விளங்கு கின்றன. நமது சிறுவர்களுக்குத் தெரிந்திராத பல விடயங்களை இந்த நூலில் காட்டியிருப்பதும், சிறுவர்களது சிந்தனையைத் தூண்டுவன வாகவும் அமைந்துள்ளமை பாராட்டிற்குரியது.” என்று தனது அணிந்துரையில் திருகோண மலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் கூறிய கூற்றுக்கள் மனங்கொள்ளத்தக்கன.
“சிறுவர்களது உள்ளத்தில் அன்பும், அறமும், இரக்க சுபாவமும், நேர்மையும் துளிர் விடும் கருத்துக்களோடு மனித நேயத்தை வலியுறுத்தும் கருக்களும் முளைவிட்டு மலர வேண்டும். அதற்கேற்றவாறு சிறுவர் இலக்கி யங்கள் பல்கிப் பெருக வேண்டும். எனது பாடல் களும், ஏனைய சிறுவர் கதைகளும், சிறுவர் நாவல்களும் இவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்கின்றார் நூலாசிரியர்.
பிள்ளைகள் வளர்கின்ற சூழல், பெற் றோர்களின் கவனிப்பின்மை, வறுமை, கல்வி கற்றலுக்கான வசதியின்மை போன்ற இன்னோ ரன்ன காரணங்களால் இன்றைய சமுதாயச் சிறார்கள் சீரழிந்து கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இத்தகைய சிறுவர் இலக்கியங்கள் கீழ்மட்டச் சிறார்களைச் சென்றடைய வழி சமைக்க வேண்டியது நமது கடமையாகக் கொள்ளும்போதுதான் நூலாசிரியரின் ஆதங்கம் நிறைவேறும்.
“ஒற்றுமை நமக்குள் வரவேண்டும் - நாம்
உறவும் உரிமையும் பெறவேண்டும்
மற்றவர் போற்ற இலங்கையராய் - இங்கு
மகிழ்ந்து வாழ்வோம் சகோதரராய் .
என்ற பாடல் வரிகள் வேண்டப்படும் யதார்த்தமான உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளது.
ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் - இந்த
உலகில் பெருமை பெறலாம்
என்று சொல்லும் பெரியோர் - இங்கு
இணைந்து வாழும் குடும்பம்
இன்றைய சமுதாயம் வயோதிபர்களை ஒதுக்கி வைத்து, அவர்களால் குடும்பத்தில் பெரும் சுமை என்று எண்ணிக் கொண்டி ருக்கின்ற காலகட்டத்தில் ‘இணைந்து வாழும் குடும்பம்’ என்ற பதம் சிறுவர் மனங்களில் புகுத்தப்படுவது முக்கியமானதாகும். நல்ல சிறுவர் இலக்கியங்களைப் படைத்துக் கொண்டி ருக்கின்ற நூலாசிரியரின் பணி தொடரட்டும்.
- த. சிவா/p>