பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
ஒளி - 07
சுடர் - 01
இதழ் - 73
June 2006
-- லண்டனிலிருந்து என். செல்வராஜா
நோர்வேயில் ஒஸ்லோ நகரில் அமைந் துள்ள சிவசுப்பிரமணியஆலயத்தில் ராஜ் கண்ணா என்ற இளம் படைப்பாளியின் வண்ணமலர்கள் என்னும் சிறுவர் நூல் வெளியீட்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூல் வெளியீட்டு வைபவத்தை திருமதி நகுலாம்பிகை தனபாலசிங்கம் அவர்கள்; தொகுத்து வழங்கினார். நோர்வே இந்து கலாச்சாரமன்றத் தலைவர் திரு. புலேந்திரன் அவர்கள் ராஜ்கண்ணாவின் வண்ணமலர்கள் நூலை அறிமுகம் செய்து வைத்தார். நோர்வேயில் வாழும் பல்கலைக்கழக மாணவனான இந்நூலின் படைப்பாளி. ஏற்கனவே 2005இல் “பிஞ்சு மனம்” என்னும் மற்றொரு சிறுவர் நூலையும் வெளியிட்டி ருக்கிறார். வண்ண மலர்கள் அவரது இரண்டாவது படைப்பாகும். நைஜீரியாவில் பிறந்து இலங்கையில் சிறிதுகாலம் வளர்ந்து மீண்டும் புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் ராஜ்கண்ணாவின் பெரும்பாலான காலம் புகலிட வாழ்விலேயே அதுவும் பன்மொழிக் கலாச்சாரங்களினூடேயே வளர்ந்திருக்கின்றது. இருந்தபோதிலும், தமிழில் இவர் பெற்றுள்ள புலமை தமிழ் நூல்களை வாசித்தறிந்து பெற்ற அறிவு என்பன, புகலிட வாழ்வுக்குள் வலிந்து இழுத்துவரப்பட்ட இரண்டாம் தலைமுறை சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ராஜ்கண்ணா ஒரு முன்மாதிரியாக, வகைமாதிரியாக திகழ்வார் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.
திருமதி பொன்னையா ஜெயஅழகி அரணகிரிநாதன் அவர்கள் எழுதிய ஆங்கில நூலான The Thevaram contribution to Saivism and Indian Music என்ற நூலின் வெளியீடு லண்டன், ரூட்டிங் சிவயோகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
லண்டன் ரத்தினம் நிறுவன நிறுவுநர் கலாநிதி இ.நித்தியானந்தன் தொடக்கவுரை நிகழ்த்தினார். SOAS பல்கலைக்கழகத்தின் சமய வரலாற்றுத்துறை பீடத்தின் முன்னாள் தலைவரான பெராசிரியர் Humphrey Fisher அவர்களும், அதே பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை முன்னாள் தலைவரும் தமிழ்ப் பேராசிரியருமான பேராசிரியர் ஜோன் மார் அவர்களும், திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் அவர்களும், பெரியபுராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரான வணக்கத்திற்குரிய Robin McGlashan அவர்களும் இந்நிகழ்ச்சியின்போது விமர்சன உரையாற்றினார்.
22.4.2006 அன்ற சனிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா புலவர்மணி இளவாலை அமுது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற நூலும், தொடர்வண்டித் தூது என்ற நாவலும் அன்றைய தினம் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபத்தில் வெளியிடப;பட்டன. இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் செல்வி ரூஷாணி செல்வேந்திரன் அவர்களின் வீணை இசையும், சியாமினி சிவானந்தன் அவர்களின் தமிழிசையும் இடம்பெற்றன.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற நூல், சைவ உலகம் என்ற காலாண்டிதழில் வெளிவந்த அரங்க முருகையனின் கட்டுரையொன்றின் நூலுருவாகும்.. மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முரகையனின் கருத்துக்கள் இந்நூலில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிவாகியுள்ளன.
கோயில்கள் பழங்காலத்திலே இயங்கி யதைப் போன்று தான் சார்ந்த சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வளரவேண்டும் என்று அரங்க முருகையன் இந்நூலில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். கோவில்கள், சமூக மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அமைதியாக வழிபாடு செய்யவும், வயிற்றுப் பசியாறும் அறச்சாலை யாகவும், மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக் கூடமாகவும், நுண்கலைகளைப் பயிலும் கலைக்கூடமாகவும், அக்கலைகளை அரங் கேற்றும் மண்டபமாகவும் இன்றைய நவீன ஆலயங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்று அரங்க முருகையன் அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகி;ன்றார்.
இரண்டாவது நூலான தொடர்வண்டித் தூது ஒரு தூயதமிழ் நாவலாகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். இந்நூல் பற்றிய தனது அணிந்துரையில் திரு வேம்பையன் தொல்காப்பியன் அவர்கள் இன்றைய நவநாகரிக இங்கிலாந்தில் பல்லினக் கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த சராசரி இளம் பிள்ளைகளின் மனப்போக்கை முழுமையாக அப்படியே பிரதிபலிப்பதாகக் கதை மாந்தர் சிலரின் குணநலகன்கள் இல்லாவிட்டாலும் கூட அதை காட்சிப்படுத்தி வடிவமைப்பது கதாசிரியரின் கற்பனை உரிமையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அரங்க முருகையன் அவர்கள் லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தேர்வாளராகவும் இங்கு இயங்கியுள்ளார். 1978ம் ஆண்டு முதல் கிரீன்போர்ட்டிலுள்ள மேற்கு லண்டன் தமிழ்ப் பள்ளியில் மொழித்துறைத் தலைவர் பணியில் ஈடுபட்டு வருகின்றார். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகத் திகழ்கிறார்.
இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
அரங்க முருகையன் அவர்கள் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட ஆறு நூல்களிலும் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் அவர்கள் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி இலண்டன் தமிழ் வாசகம் என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார்.
தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம் என்ற நூலும், சோழர் வெற்றி என்ற நூலும் தமிழரின் வரலாற்றின் இருவேறு காலகட்டங்களை பதிவுக்கு உள்ளாக்கியுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் தமிழகத்துக்கு அப்பால் தமிழ் இலக்கியங்கள் ஈழத்துத் தமிழர்களால் நகர்த்திச் செல்லப்படுவதை பெருமையுடன் நாம் நினைவு கூர வேண்டும். கட்டுப்பாடற்ற சுதந்திரச் சிந்தனை வளமும் நிதி வளமும் புகலிட நாடுகளில் எங்களிடையே மலிந்திருப்பதால் இன்று புலம்பெயர்ந்துவாழும் ஈழத்துத் தமிழர்கள் இலக்கியத்துறையிலும், வெளியீட்டுத் துறையிலும் மிகவும் முன்னேறிச் சென்றுள்ளனர்.
பிரான்ஸிலிருந்து கொண்டு கடந்த பல வருடங்களாக வெளியீட்டுத் துறையிலும், படைப்பிலக்கியத்துறையிலும் அகலக்கால் பதித்துவரும் வண்ணை தெய்வம் அவர்கள் பிரன்ஸில் இயங்கும் ஏபீசீ வானொலியின் அறிவிப்பாளரும் கவிஞரும் கலைஞரும் சிறந்த எழுத்தாளருமாவார். இவர் எழுதி வெளிவந்த முதலாவது “நூல் விடிவை நோக்கி” என்ற கவிதைத் தொகுதியாகும். இது 1992இல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து பொல்லாத மனிதர்கள், யாழ்ப்பாணத்து மண்வாசனை, வான் அலைகளில் எங்கள் கவிதைகள் தொகுதி 1, தொகுதி 2, கலைப்பாதையில் நடிகர் கிரெகரி தங்கராசா, (கலைமாமணி பெஞ்சமின் இம்மானுவல் அவர்களின் வாழ்வும் பணிகளும் கூறும் நூலான) கதாநாயகன், கலைத்துறையில் இரு மலர்கள், எடுத்துக்காட்டாக விளங்கும் நாகேந்திரம் குடும்பம், கொந்தல் மாங்காய், தாயக தரிசனம் ஆகிய 11 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இவற்றில் சில மீள்பதிப்பும் கண்டுள்ளன.
யாழ்ப்பாணத்தைப் பற்றிய தமது உணர்வனுபவங்களை எழுத்தாளர் வண்ணை தெய்வம் அவர்களின் வாயிலாகப் பதிவுசெய்து இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் மாதப் பத்திரிகையில் 22 அங்கங்களில் தொடராக வெளியிட்டிருந்தனர். சுவையான அந்தப் பிரயாணக்கட்டுரை எமது சமூகத்தின் குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தை ஓரளவாவது எமக்குக் காட்டியிருந்தது.
தற்போது இவர் மின்னாமல் முழங்காமல் மேற்கொண்டுள்ள பாரிய முயற்சி ஈழத்துக் கலைஞர்கள் பற்றிய ஆவணப்பதிவாகும். “காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் என்ற இந்நூல் 656 பக்கங்களைக் கொண்டது. சென்னை மணிமேகலை பிரசுரத்தினரால் 2005இன் இறுதிப்பகுதியில் வெளியிடப் பட்டுள்ளது. இந்திய விலையில் ரூபா 290 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் என்ற இந்நூல் வண்ணை தெய்வத்தின் பாரியதொரு தேடலின் வெளிப்பாடாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதில் ஆங்காங்கே ஏராளமான புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டுரைகளுக்கும், தகவல்களுக்கும் இடையே பொருத்தமாக அவை தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. இவை இந்த நூலுக்கு மேலும் கனதியைக் கொடுத்துள்ளன. இவ்வளவு புகைப்படங்களையும் தேடி எடுத்துப் பதிக்க ஏற்படும் நேர, பொருட்செலவுகளைக் கற்பனை செய்து பார்க்கும் போது, வண்ணை தெய்வம் என்ற தனிமனிதனின் உளமார்ந்த பங்களிப்பு வாழ்த்துக்குரியதாகின்றது.
வண்ணை தெய்வம் அவர்களால் மிகுந்த கடின உழைப்பில் தொகுக்கப்பட்டுள்ள தரவுகள் எதுவும் அகரவரிசைப்படுத்தித் தரப்படவில்லை என்பது எடுத்த எடுப்பில் கண்களை உறுத்தும் குறைபாடாக உள்ளது. பொருளடக்கத்தை ஒவ்வொரு தடவையும் ஆதி முதல் அந்தம் வரை பார்த்தே நாம் அறிய விரும்பும் ஒரு கலைஞரையோ, எழுத்தாளரையோ பற்றிக் குற்ப்பிடப்பட்டுள்ள பக்கத்தைத் தேடி அடைய வேண்டிய சிக்கல் வாசகர்களுக்கு இதனால் எற்படுகின்றது. உள்ளடங்கிய தகவல்களை ஒழுங்கு முறைப்படி தரம்பிரித்துப் பதிவுசெய்திருந்தால் எளிதில் இந்தத் தவறைத் தவிர்த்திருக்கலாம்.
2002ம்திகதி நூல்தேட்டத்தின் முதலாவது தொகுதியை 1000 நூற்பதிவுகளுடன் வெளியிட்டிருந்தேன். பின்னர் 2004இல் இரண்டாவது தொகுதியை மேலும் 1000 நூற்பதிவுகளுடனும், 2005இல் மூன்றாவது தொகுதியை மேலும் 1000 நூற்பதிவுகளுடன் வெளியிட்டு வைத்திருந்தேன். இவ்வாண்டு ஜுலை மாதத்தில் நான்காவது தொகுதி வெளிவரவுள்ளது. இதுவரை 4000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து மற்றொரு தொகுதிக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுவருகின்றேன்.
இந்நிலையில் ஜேர்மன் சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் எனது நூலியல் பணியினை கௌரவிக்கும் முகமாக, நூல்தேட்டம் வெளியீட்டின் 3 தொகுதிகளினதும் அறிமுக விழாவொன்றினை எதிர்வரும் 28.05.2006 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு ர்யவவiபெநn – றுநடிநச என்ற இடத்தில் ஒழுங்குசெய்திருக்கிறார்கள்.
.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.