ஊடக சுதந்திரம்
ஊடக சுதந்திரம் என்பதைக் கொச்சைப் படுத்தும் நாடுகளுள் ஒன்றாக இலங்கை மாறிவிட்டது. ஊடக சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் அதற்கு எதிராகவே நடந்துகொள்கின்ற வினோதத்தை இந்நாட்டில் தாராளமாகக் காணலாம். ஊடக சுதந்திரத்தை முதலிற் கொச்சைப் படுத்துவன இந்நாட்டின் அரச ஊடகங்களாகும். இவை ஒரு நாளைக்கு எத்தனை பொய்களைச் சொல்லுகின்றன! உண்மைக்கு மாறான செய்திகளாலேயே பக்கங்களையும், நேரத்தையும் அவை நிரப்புகின்றன. தமிழர் விரோத செய்திகளுக்கே இவை முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நாட்டில் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் பேரினவாதத்தை எந்தெந்த வகைகளில் ஊக்கி வளர்க்கலாமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன.
அதேவேளை, தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே பணியாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும், அவர்களது இராசவிசு வாசிகளும் ஊடக சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் காவலர்கள் போல் அவ்வப் போது கண்டன அறிக்கைகள் வெளியிட்டுத் தமது “ஜனநாயகப் பற்றைப்” புலப்படுத்தி வருகின்றனர். இந்த இலட்சணத்தில், இந்நாட்டில் அண்மையில் சர்வதேச ஊடக மாநாடு நடந்துமுடிந்துள்ளது. இம்மாநாடு நடந்துகொண்டிருந்த வேளையில் வேட்டைக்காரர்களும், இராசவிசுவாசிகளும் ஊடக சுதந்திரத்தை எவ்வாறு “கௌரவித்தனர்” என்பது உலகம் அறிந்த உண்மை.
எப்போதுமே பெரிய அதிகாரிப் பதவி வகிப்பவர்களுக்கும், பேரினவாதிகளுக்கும், இராச விசுவாசிகளுக்கும் உண்மை பேசும் ஊடகங்களைப் பிடிப்பதில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் உண்மை பேசும்போது, அவை உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன என்று இவர்கள் குற்றம் சாட்டுவர். உண்மைக்கு எப்போதும் மரணதண்டனை விதிப்பதிலேயே இவர்கள் ஆர்வமாகவும், அக்கறையாகவும் உள்ளனர். ஆனால், வெளிநாட்டுப் பெரிய அதிகாரிகளுக்கு இவர்கள் பேசும் பொய்களே உண்மைகளாகத் தெரிகின்றன.
இலங்கையும் தமிழக அரசியலும்
தமிழ்நாட்டின் பரபரப்பான தேர்தல் முடிந்து, முடிவுகளும் வெளிவந்து, புதிய ஆட்சியும் அமைந்துவிட்டது. ஜெயலலிதா ஆட்சி முடிவடைந்ததைக் கேள்வியுற்ற ஐம்பதுக்கு மேற்பட்டோர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்தவரையில், அவரது ஆட்சியின் வீழ்ச்சி மனதுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினைத் தமது அரசியற் கொள்கைகளுள் ஒன்றுபோலக் கொண்டிருந்த அவர், திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், இலங்கைத் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு வில்லியாகவே நோக்கப்பட்டார். அவரின் தோல்வி, இலங்கையின் பேரினவாதிகளுக்கும், இராசவிசுவாசிகளுக்கும் மாத்திரமே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஐந்தாவது தடவையாகப் பதவி பெற்ற மு. கருணாநிதியும் இலங்கைத் தமிழர்களால் இப்போது பெரிதும் மதிக்கப்படும் ஒருவரல்லர். ஆயினும், ஜெயலலிதாவை விட ஓரளவாவது இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிக் கருணாநிதிக்குக் கரிசனை உண்டு. ஆனால், அவரிடத்தில் இயல்பாகவுள்ள சந்தர்ப்பவாதமும் நழுவல் போக்கும் இலங்கைத் தமிழர் மனங்களிலிருந்து அவரைப் பெருமளவு இறக்கிவிட்டுள்ளன. திரைப்பட வசனங்களில் தமது துணிச்சலைக் காட்டிய மு. கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்பு போல அடங்கியிருக்கிறார். அண்மையில் மீண்டும் முதல்வரான பின், அவர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்து அவரது சந்தர்ப்பவாத நழுவல் போக்கை இனங்காட்டுகின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான போதிய தகவல்கள் தமக்குத் தெரியவில்லை என்றும், தெரிந்து கொண்ட பின் தாம் கருத்துத் தெரிவிப்பதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி வை.கோ.வுக்குத் தெரிந்திருக்கிறது. ராமதாஸுக்குத் தெரிந்திருக்கிறது; திருமாவளவனுக்குத் தெரிந்திருக்கிறது; பழ. நெடுமாறனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், எழுத்தாளரும், கலைஞரும், தமிழக முதல்வருமாகிய கருணாநிதிக்குத் தெரியவில்லை!
தமிழக அரசியலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சோக சம்பவம், வை. கோ. ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தமையாகும். தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக வை. கோ. கருணாநிதி தலைமைக் கூட்டணியிலிருந்து விலகி, ஜெயலலிதா கூட்டணியில் இணைந்து கொண்டார், ஜெயலலிதா கூட்டணியில் தாம் இணைந்து கொண்டமை பற்றி என்னதான் வை. கோ. சமாதானம் கூறினாலும், தம்மைத் தேவையின்றிச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்திய ஜெயலலிதாவோடு அவர் கூட்டணி அமைத்துக்கொண்டமை வரவேற்கத்தக்கது அன்று. இவ்வாறு அவர் நடந்து கொண்டது சந்தர்ப்பவாதமாகவே கருதத்தக்கது. அதேவேளை, கருணாநிதியின் கட்சியிற் காணப்படும் குடும்ப ஆதிக்கமும் வை. கோ. வெளியேற்றத்துக்கு ஒருவகையிற் காரணமாகும். காரணம் எதுவாக இருப்பினும், வை. கோ. தமது கையைத் தாமே சுட்டுக் கொண்டு விட்டார்.
ஆனால், வை. கோ. எங்கிருந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அக்கறையுடன் செயற்படுபவர். அவ்வப்போது மத்திய அரசுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு, இலங்கைத் தமிழருக்கு எதிரான பாதிப்புகளைத் தடுக்க முயற்சித்து வந்தவர். இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றார். அதே வேளை அவரது ஆட்சியை மத்திய அரசின் கூட்டணியிலிருந்து விலக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இலங்கைத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர், வை. கோ. வே. அவரையடுத்து, ராமதாஸ், திருமாவளன், பழ. நெடுமாறன் போன்றோரும், புதிய கட்சியைத் தோற்றுவித்த நடிகர் விஜயகாந்த்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அக்கறை உள்ளவர்கள்.
அயல்நாட்டில் இதுவரை இருந்துவந்துள்ள சகல மத்திய அரசுகளுக்கும் இலங்கைத் தமிழருக்கு எதிராக அவ்வப்போது இருக்கும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் துணை போவதற்கு மிகவும் விருப்பம் உள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் அதிகாரிகளுக்கு இத்தகைய விருப்பம் நிறையவே உண்டு. ஆனால், அவர்கள் தமது விருப்பங்களை முறையாக நிறைவேற்ற முடியாதபடி செயற்பட்டு வருபவர்கள், தமிழ்நாட்டில் வை. கோ. போன்ற சில அரசியல் தலைவர்களே ஆவர். இல்லையேல், இலங்கைத் தமிழருக்கு எதிரான இந்நாட்டு உறவுகளும் மேலும் பலப்பட்டு இருக்கும். ஜெயலலிதா போன்ற வில்லிகளும், கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாதிகளும் தமிழ்நாட்டில் இருந்தபோதிலும், இலங்கைத் தமிழரின் இருப்பை ஓரளவு பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் மேற்குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களே.