‘இஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம்’ நூல் அறிமுக விழா:
மருதமுனை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு தெமட்டகொடை வை. எம். எம். ஏ மண்டப கேட்போர் கூடத்தில் அறிஞர் எஸ். எச். எம். ஜெமீல் அவர்கள் தலைமையில் ‘இஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம்’ நூல் அறிமுக விழா நடைபெற்றது. பிரதம அதிதியாக பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமாகிய ஏ. எச். எம். அஸ்வர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக தேசமான்ய டாக்டர் ஏ. எம். எம். சஹாப்தீன், அறிஞர் அ. முகம்மது சமீம், பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கலாநிதி எம். எஸ். எம். அனஸ் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக சட்டத்தரணி எம். எம். அபுல் கலாம், திரு. யூ. எல். ஏ. மஜீத், புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோரும் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்.
வரவேற்புரையை எஸ். எச். எம். செய்யீத் ஷபீர் அஹ்மத் மௌலானா நிகழ்த்த நூல் வெளியீட்டை புரவலர் ஹாஷிம் உமர் மேற்கொண்டார். எஸ். ஏ. ஆர். எம். செய்யத் ஹஸன் மௌலானா அவர்களின் ஏற்புரையுடன் அறிமுகவிழா நிறைவெய்தியது.
சர்வோதயத் தலைவருக்கு சர்வதேச விருது:
கனடா டொரன்டோ பல்கலைக்கழக கலாநிதி சுசில்குமார் சர்வதேச சமாதான விருது 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றது. முதல் சமாதான விருது பேராசிரியர் ஜோன் டொலன்ஜிக்கும், 2004 ஆண்டு இரண்டாவதாக திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கும் வழங்கப்பட்டன. 2005ஆம் ஆண்டுக்கான விருது இலங்கையரான சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏ. ரி. ஆரியரத்னவுக்குக் கிடைத்துள்ளது. கலாநிதி சுசில்குமார் மாபெரும் ஜெயின் போதகராக இருந்தார். புகழ்பெற்ற சமாதான செயற்பாட்டாளரான இவர் 1994இல் காலமானார். அவர் பெயரால் மத ஐக்கியத்துடன் அஹிம்சை வழியில் செயலாற்றுகின்ற சர்வதேச தலைவர்களுக்கு சமாதான விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.
கலாநிதி ஏ. ரி ஆரியரத்ன டொரன்டோ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் பங்கேற்று சமாதான விருதுடன் 10,000 அமெரிக்க டொலர் பொற்கிழியையும் பெற்றுக் கொண்டார்.
‘நகைச்சுவை விருந்து’ நூல் வெளியீட்டு விழா:
‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது முதுமொழி அந்த வகையில் நகைச்சுவை வேந்து இ. சிறிஸ்கந்தராசா ‘நகைச்சுவை விருந்து’ என்னும் நூலைத் தந்துள்ளார். சிரிக்கவும் சிந்திக்கவும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இந்நூலின் வெளியீட்டு விழா அண்மையில் திரு. கே. அரசரத்தினம் (அகில இலங்கை நகைச்சுவை மன்றத் தலைவர்) தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. செல்வி கவினாளி கிறிஸ்கந்த ராசாவின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்த விழாவில் திரு. ச. இலகுப்பிள்ளை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரையை கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. குமாரசாமி சோமசுந்தரம் வழங்க, திரு. தெ. ஈஸ்வரன் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். ‘நகைச்சுவை விருந்து’ நூலின் முதற்பிரதியைத் தலைவர் வழங்கி வைக்க இலக்கியப் புரவலர் மனித நேய மாமணி அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக் கொண்டார். செல்வி தேனுஷா ஈஸ்வரம் (இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி) நகைச்சுவைப் பேச்சின்மூலம் சபையோரை மகிழ்வித்தார். முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். பி. சூசைதாசன் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்புரையில் தனது நூல், நூல் வெளியீட்டில் 12வது நூல் என்றும் நகைச்சுவை வரிசையில் ஐந்தாவது வெளியீடு என்றும் நூலாசிரியர் இ. சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.
சாம ஸ்ரீ தேசமான்ய கீர்த்தி விருது:
‘துயரக்கொழுந்துகள்’, ‘இதயக் கதவுகள்’, ‘கைதுப் புறாக்கள்’ என்பன எழுத்தாளர் மடவளை கலீலின் பிரசித்தமான நூல்களாகும். மலையகத்தின் இருமொழிக் கவிஞரான மடவளை கலீல் தமிழ்மொழியில் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளியீட்டுள்ளார். இவருக்கு மத்தியமாகாண தமிழ்க் கல்வி அமைச்சு மாத்தளையில் நடாத்திய மாகாண சாகித்திய விழாவில் விருது வழங்கிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சமாதானம் வேண்டி சிங்கள மொழியில் வெளியிட்ட “அவிய பிம தபமு” (ஆயுதத்தைக் கீழே வைப்போம்) என்ற நூலைக் கௌரவித்தே அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் அதி உயர் விருதான ‘சாம ஸ்ரீ தேசமான்ய ‘கீர்த்தி’ விருது மடவளை கலீலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
என். கே. ரகுநாதன் படைப்புகள் ஆய்வுக் கருத்தரங்கு :
விபவி கலாசார மையமும், முற்போக்கு கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்திவரும் தொடர் கருத்தரங்கு வரிசையில் ஈழத்து மூத்த முற்போக்கு எழுத்தாளராகிய என். கே. ரகுநாதனின் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கு 07.05.2006 அன்று வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது. திரு. ஏ. ஜெயரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் தெ. மதுசூதனன் அவர்கள் ஆய்வுரையை நிகழ்த்தினார். ‘நிலவிலே பேசுவோம்’ என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 1975ஆம் ஆண்டு ‘தச மங்கலம்’ என்னும் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் என். கே. ர. ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ என்று கிராமத்தின் வரலாற்றை மையமாகக் கொண்டு ஒரு நாவலைத் தந்துள்ளார். இவருடைய ‘கந்தன் கருணை’, ‘ஏகலவன்’நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இவருடைய எழுத்துக்களில் விடுதலைக்கான எழுச்சியையும், மனிதநேயத்தையும், தனித்துவத்தையும், புதிய மாற்றத்தையும் தரிசிக்கலாம் என்று தனது ஆய்வுரையில் தெ. மதுசூதனன் அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு தமிழ்ச் சங்கப் புதிய மண்டபத் திறப்பு விழாவும் கலை நிகழ்வும்:
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் புதிதாக மூன்றாவது மாடியில் நிர்மாணிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம் - மாலதி’ மண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. குமாரசாமி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியம் தம்பதியினர் புதிய மண்டபத்தை திறந்து வைத்தனர். திரு. சி. அமிர்தலிங்கத்தின் தமிழ் வாழ்த்தைத் தொடர்ந்து, வரவேற்புரையை திரு. ஆ. குகமூர்த்தி நிகழ்த்தினார். பிரம்ம ஸ்ரீ சிவாகம திலகம், சிவகாம பூஷணம் பா. சண்முக ரட்ண சர்மா அவர்கள் ஆசியுரை வழங்கினார். விழாவை ஒட்டி ‘படிக்கட்டு’ என்ற பெயரில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ. மகேஸ்வரன் மலர் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். ‘படிக்கட்டு’ சிறப்பு மலர் எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட்டடது. கலை நிகழ்ச்சியில் சைவமங்கையர் கழக இசை நடனக் கல்லூரி மாணவியர் பிரிந்தா ஸ்ரீதரன், வபிதா ஸ்ரீதரன், யஷ்சாஜினி தியாகராஜன், நாகசாயி ஜனனி பத்மநாதன், மயூரி குலசேகரன் ஆகியோர் திருமதி. சந்திரிக்கா சூரிய கலா ஜீவானந்தனின் நெறியாள்கையில் நடனம் ஆடினார்கள். செல்வி மயூரி ஜோசப்பின் தனி நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தமிழ்வேள் இ. க. கந்தசாமி வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பை திரு. சி. எழில்வேந்தன் நிகழ்த்தினார். விழாவில் சுப்பிரமணியம் - மாலதி தம்பதியினருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 27 நூல்களின் வெளியீட்டு விழா:
சென்னை மணிமேகலைப் பிரசுரத்தார் 27 இலங்கை எழுத்தாளர்களின் நூல்களின் வெளியீட்டு விழாவை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடாத்தினார்கள். புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற நூலை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. குமாரசுவாமி சோமசுந்தரம் வெளியிட திரு. என். ஸ்ரீரஞ்சன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். பூண்டுலோயா திரு. தி. இரா. கோபாலன் எழுதிய ‘நல்லதோர் வீணையாக விளங்கிய சி. வி. கந்தையா’ என்னும் நூலை மலையக எழுத்தாளர் தோழர் அந்தனி ஜீவா வெளியிட பிரபல தொழிலதிபர் சுப்ரமணியம் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் வரலாறு, கட்டுரை, சமயம், கவிதை , அழகுக்கலை, மருத்துவம், சிறுகதை, வாழ்வியல், நாவல், அரசியல், திறனாய்வு ஆகிய துறைசார்ந்த பல நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. காலை, மாலை நிகழ்வுகளாக இடம் பெற்ற இந்த வெளியீட்டு விழாவுக்கு சக்தி தொலைக்காட்சியும், சக்தி எப் எம் வானொலியும் ஆதரவு வழங்க, விழா ஒழுங்குகளை மணிமேகலைப் பிரசுர அதிபர் திரு. ரவி தமிழ்வாணன் மேற்கொண்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மேலும் யாழ்பாண எழுத்தாளர்களின் எட்டு நூல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. அமரர் யாழ்வாணனின் ‘மலர்ந்த வாழ்வு’ சிறுகதைத்தொகுதி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தரமான இலக்கியப் படைப்புக்களை வாசிக்கும் ஈழத்து வாசகர்களுக்கு இந்நூல்கள் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
‘நாடகமும் அரங்கியலும்’ வெளியீட்டுவிழா:
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய ஆசிரியர் திரு. இ. குணசீலன் எழுதிய ‘நாடகமும் அரங்கியலும்’ நாடகத் தயாரிப்பு நூல் வெளியீட்டு விழா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பேராசிரியர் சி. மௌனகுரு, கிழக்குப் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி பாலசுகுமார், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ. செல்வநாயகம், அதிபர் பி. இலட்சுமணன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தார்கள். பேராசிரியர் சி. மௌனகுரு, கலைத்துறைப் பீடாதிபதி திரு. பாலசுகுமார் நாடக அரங்கியல் நூல்பற்றி தமது கருத்துக்களை தெளிவுபடுத்தினர். நூலாசிரியர் திரு. இ. குணசீலன் ஏற்புரை நிகழ்த்தினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் இலக்கியக் கருத்தரங்குகள்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இலக்கியம் தொடர்பாகப் பல்வேறு கருத்தரங்குகளை நடாத்திவருகிறது. தமிழ்த்துறை இருவேறு விதமாக இக்கருத்தரங்குகளை நடாத்தி வருகிறது. ஒன்று தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கு. இதில் தமிழ்த்துறை விரிவுரையாளர்களும், எனையதுறை விரிவுரையாளர்களும், பிற பல்கலைக் கழகத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆய்வுரைகளை வழங்குகின்றனர். மற்றையது தமிழ்த்துறையின் பொறுப்பில் உள்ள ‘சங்கப் பந்தல்’ என்னும் பெயரினையுடைய தமிழ்த்துறை மாணவர்களின் இலக்கியக் கருத்தரங்கு ஆகும். மாணவர்கள் மட்டுமல்லாது ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களும் இதற்காக அழைக்கப்படுகின்றனர். ஈழத்தில் உள்ள முக்கியமான எழுத்தாளர்களை மாதத்திற்கு ஒருவராக அழைத்து அவர்களது படைப்புலகம் தொடர்பாகக் கலந்துரையாடித் தகவல்களைப் பெற்றுக் கொள்வதாகும்.
இந்தவகையில் பின்வரும் கருத்தரங்குகள் அண்மைக் காலத்தில் நடைபெற்றுள்ளன.
தமிழ்த்துறைக் கருத்தரங்குகள்
இக் கருத்தரங்குகளிற்குத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி துரை. மனோகரன் தலைமை தாங்குகிறார்.
ட ‘இன மொழி அடையாளமாக முருகன்’
ஆய்வாளர் - கலாநிதி வ. மகேஸ்வரன் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
25.01.2006 (பி.ப 3.30)
ட “இலக்கியமும் அரசியலும்”
ஆய்வாளர் - பேராசிரியர் அ. சிவராஜா ( அரசறிவியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
15.02.2006 (பி.ப 3.30)
ட ‘சுந்தரராமசாமி - ஆளுமை படைப்பு விமர்சனம்’
ஆய்வாளர் : பேராசிரியர் எம். ஏ. நுஃமான் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
01.03.2006 (பி.ப. 3.00)
ட படைப்பும் படைப்பாக்கமும்
ஆய்வாளர் : பா. அகிலன் (விரிவுரையாளர், நுண்கலைத்துறை, யாழ் பல்கலைக்கழகம், சுயாதீனக் கலை விமர்சகர்.)
ட சோழப்பேரரசு - அரசரும் ஆட்சிமுறையும்
ஆய்வாளர் : பேராசிரியர் சி. பத்மநாதன்
23.03.2006 (பி.ப. 4.00)
ட “19ஆம் நூற்றாண்டு - தமிழகமும் ஈழமும்”
ஆய்வாளர் : பேராசிரியர் வீ. அரசு (தலைவர், மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)
சங்கப்பந்தல் கருத்தரங்குகள்
சங்கப்பந்தல் ஆரம்ப நாள் அன்று தொடக்க உரையினைக் கலாநிதி துரை. மனோகரன் நிகழ்த்தினார். பின்னர் பேராசிரியர் ஏம். ஏ. நுஃமான், பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் அறிமுக உரைகளை நிகழ்த்தினர். கலாநிதி வ. மகேஸ்வரன், உதவி விரிவுரையாளர் செ. சுதர்சன் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர். இத்துடன் அங்குரார்ப்பண நிகழ்வு முடிவுற்றது.
பின்னர் அடுத்தடுத்த மாதங்களில் சங்கப்பந்தலில் பின்வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
ட “மலையகத் தமிழ் நாவல் இலக்கியம்”
உரை : தெளிவத்தை ஜோசப் (எழுத்தாளர்)
தலைமை : த. கனகராஜ்
ட “எனது படைப்புலகம்”
உரை : தி. ஞானசேகரன் (எழுத்தாளர், ஞானம் ஆசிரியர்)
தலைமை : ஜே. ஆன் யாழினி
ட ‘சிங்களத் திரைப்படப் பாடல்களில் தமிழ்பேசும் சமூகம்’
உரை : எம். சி. ஹஸ்மின் (தமிழ்த்துறை மாணவன்)
ட ‘மஹாகவியின்’ வீடும் வெளியும்
உரை : பெ. சரவணகுமார் (தமிழ்த்துறை மாணவன்)
தலைமை : விஜிதா சிவபாலன்
தமிழ்த்துறையின் இக்கருத்தரங்குகள் பல்கலைக்கழகத்தில் ஆரோக்கியமான இலக்கியப் பகிர்வுகள் நடைபெறுவதைக் காட்டுகின்றன.
-பவான்
அமரர். நா. சோமகாந்தன் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் :
ஞானம் கலை இலக்கியப் பண்ணை - கொழும்புக் கிளையின் தலைவரும், பிரபல எழுத்தாளரும், இலக்கியச் செயற்பாட்டாளருமான நா. சோமகாந்தன் அவர்களின் மறைவு குறித்த இரங்கற் கூட்டம் 21.05.2006 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெற்றது. ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் காப்பாளர் திரு. தெ. ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் நடந்த இந்த இரங்கல் கூட்டத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் இரங்கல் உரை நிகழ்த்தினார். “ஞானத்தின் கண்ணீர் அஞ்சலி” - பிரதியை அல்ஹாஜ் ஹாசிம் உமர் வழங்கினார். திரு. வி. ஏ. திருஞான சுந்தரம், கலாசூரி ஆ. சிவனேசச்செல்வன் திருமதி சாந்தி நாவுக்கரசன், திரு. அந்தனி ஜீவா, திரு. தெளிவத்தை ஜோசப், திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் இரங்கல் உரைகள் நிகழ்த்தினர். மேமன்கவி கவிதாஞ்சலி நிகழ்த்தினார். பெருந்தொகையானோர் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு அமரர் சோமகாந்தனுக்கு அஞ்சலி செலுத்தினர். ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் செயலாளர் திரு. ஆர். பி. ஸ்ரீதரசிங் இரங்கல் கூட்ட ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
- அரவிந்தன்
‘யாழ்பாண அகராதி’ நூல் வெளி யீட்டு விழா :
1842இல் முதன்முதலாக வெளிவந்த அகராதி, காலத்தின் தேவை கருதி 164 ஆண்டு களுக்குப் பின் சேமமடு பொத்தக சாலை அதிபர் திரு. பத்மசீலன் அவர்களின் பெருமுயற்சியால் ‘யாழ்ப்பாண அகராதி’யாக வெளிவந்துள்ளது. நூல் வெளியீட்டு விழா கொழும்புத்தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அதன் தலைவர் திரு. குமாரசுவாமி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஓய்வுநிலைப் பேராசிரியர் கார்த்தி கேசு. சிவத்தம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்கி னார்கள். கலாநிதி வணக்கத்திற்குரிய சு. ஜெப நேசன் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தி, நூலை வெளியிட்டுவைக்க இலக்கியப்புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழக முது நிலை விரிவுரையாளரும் சிறந்த ஆய்வாளரு மாகிய கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் நூலின் அறிமுக உரையை நிகழ்த்தினார். தமிழ்நாட்டி லிருந்து வருகைதந்த திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா. இளங்குமரனார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அகராதி பற்றிய தமது கருத்துக்களை வெளியிட்டார். பதிப்பாளர் உரையை தமிழ்மண் பதிப்பக நிறுவனர் திரு. கோ. இளவழகன் நிகழ்த்தினார். தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் விழா நெறியாளருமாகிய திரு. தெ. மதுசூதனன் நன்றியுரை நயந்தார். விழாவில் குழந்தை சண்முகலிங்கத்தின் ‘எந்தையும் தாயும்’ நாடகமும் மேடை ஏற்றப்பட்டது.
உமாதி சிவாசாரியார் குருபூசையும் நூல் அறிமுக விழாவும் :
கொழும்புச் சிவத்திருமன்றம் உமாபதி சிவாசாரியார் குருபூசையையும் நூல் அறிமுக விழாவையும் புராணவித்தகர் மு. தியாகராசா அவர்கள் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடாத்தியது. இவ்விழாவில் பண்டிதர் மு. கந்தையா அவர்கள் எழுதிய ‘சித்தாந்தச் செழும்புதையல்’, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நூல் அறிமுகத்தை தேசிய கல்வி நிறுவகத் தமிழ்த் துறைப் பணிப்பாளர் திரு உ. நவரத்தினம் வழங்கினார். நூல் நயவுரை திருமதி ஞானம். ஞானசேகர ஐயர் (ஞானம் சஞ்சிகையின் துணை ஆசிரியர்) அவர்களால் நயக்கப்பட்டது. கலாநிதி க. கணேசலிங்கம் அவர்கள் “குருநெறி” - சித்தாந்தரத்தினம் என்னும் பொருளில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். “சைவசமய தத்துவத்தை அறிவதற்கு பயனுள்ள சிறந்த நூல் பண்டிதர் அவர்களின் “சித்தார்ந்தச் செழும்புதையல்” என்று சிவத்திருமன்றச் பொதுச்செயலாளர் திரு. செ. சொர்ணலிங்கம் தெரிவித்தார்.
‘நூலகப் பகுப்பாக்கம்’ வெளியிட்டு விழா :
யாழ். பல்கலைக்கழகக் கல்விசார் நூலகர் செல்வி. ஸ்ரீகாந்த லட்சுமி அருளானந்தம் அவர் களால் உருவாக்கப்பட்ட ‘நூலகப் பகுப்பாக்கம்’ நூல் வெளியீட்டு விழா யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நூலகர் எஸ். தனபால சிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நூலகர் திரு எம். வி. குணாளன் வரவேற்புரை நிகழ்த்தினார். பிரதம விருந்தினராக யாழ். மாநகர ஆணையாளர் சீ. வி. கே. சிவஞானமும் சிறப்பு விருந்தினராக யாழ். பிராந்திய உள்ளூ ராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பித் தார்கள். நூலின் முதற்பிரதியை கலாநிதி ஏ. சபாரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டுரையை யாழ். கல்விவலய நூலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மீரா அருள்நேசன் வழங்க, யாழ். பல்கலைக்கழக பதில் நூலகர் திருமதி இராஜேஸ்வரி கருணானந்தராஜா ஆய்வுரையை நிகழ்த்தினார். யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் எம் . நித்தி யானந்தன், திருமதி கல்பனா சந்திரசேகரம், திரு. பீ. தனபாலன், திருமதி. ஏ. வேதநாயகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நூலாசிரியர் செல்வி ஸ்ரீகாந்தலட்சுமி பதிலுரை நிகழ்த்த, நூலகர் எஸ். சௌந்தரநாயகம் நன்றியுரை வழங்கினார்