“கையை எடுங்கோப்பா...”
சொன்னபடியே தன் வயிற்றில் படிந்த அவனது கைகளை மெல்ல விலக்கினாள் அவள். குரலில் சலிப்பு ஊறியிருந்தது. அவசரமாகக் கையை எடுத்துக் கொண்டவன் மனம் வேதனையோடு மரவட்டையாய்ச் சுருங்கியது. மனைவியின் புறக்கணிப்பைப் போல வலி தரக் கூடியது உலகில் வேறொன்றுமில்லை என்று தோன்றியது அவனுக்கு. அவளது துயரங்களை முகத்தின் உணர்வுகளாய் வாசித்து ஆறுதலாகக் கதைக்க விரும்பியதை மனைவி புரிந்துகொள்ளாதது அவனை வேதனையோடு விலகிப் படுக்க வைத்தது.
அவளுந்தான் என்ன செய்வாள். வாழ்க்கைச் செலவு வாய்க்காலுக்கிறைத்த நீராய் வழிந்தோடுகிறது. வெறும் கையால் அணை கட்டும் பேதைமையோடு அவளும் அவனும் மாத இறுதியில் நின்றுகொண்டிருப்பது வழமையாகி விட்டது. திருமணமான புதிதில் மனத்து அன்பு இழைய இழைய அவன் வரும் வழி பார்த்து நின்றவள் தான். “கொண்ட குறிப்பறிந்து” அவனை ஆனந்த வாழ்வில் மூழ்க வைத்தவள் தான். மூன்று பெண்களும் பிறந்து மூத்த பெண்ணுக்குப் பத்து வயதாகி விட்டது ஒரு புறமிருக்க அவள் இன்று எதிர்பாராமல் “மலர்ந்து” விட்டது தான் நிலமையை இன்னும் சிக்கலுக்குள் இழுத்து விட்டிருக்கிறது. இரண்டாவது மகள் எட்டிலும் மூன்றாவது மகள் நான்கு வயதிலும் நின்றுகொண்டிருக்கிறார்கள். மூன்றாவது பிள்ளையாவது ஆண்பிள்ளை யாய்க் கிடைத்திருந்தால் குடும்பத்தில் கொஞ்சம் உற்சாகத்தை ஊற்றியிருப்பான். என்ன செய்வது? இறைவன் வகுத்த வழியில் ஆடும் பொம்மைகள் தானே மனிதர்கள்.
ஆசிரியத் தொழிலின் நடுத்தரவாழ்க்கை முறையோடு வெளியில் கஷ்டம் தெரியாமல் வாழ்க்கையைக் கொண்டிழுப்பதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. நடுத்தர வாழ்க்கை உண்மையில் திரிசங்கு சொர்க்கம் தான். சமூக ஏணியில் மேல்வர்க்கத்துடன் ஏறவும் முடியாது. அதேவேளை கீழ்வர்க்கத்தோடு இறங்கவும் முடியாது. ஆனாலும் சிக்கனமாய் வாழத்தெரிந்த அன்பான மனைவி வாய்த்துவிட்டதில் இதுவரை கடனென்று கையேந்தி நிற்க வேண்டிய நிலை வந்ததில்லை.
இப்போது மூத்த மகளின் பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாக நடத்தப் பெருந்தொகைப் பணம் தேவைப்படுகிறது. தேவையற்ற செலவு தான். ஆனால் தோழியரின் நிகழ்வுகளைப் போல தனக்கும் விதவிதமாய் அலங்கரித்துப் படங்கள் எடுக்கவேண்டும் என்றும் “வீடியோ” எடுக்க வேண்டும் என்றும் ஆயிரம் கனவுகள் தேக்கி வைத்திருக்கும் சின்னப்பெண்ணின் உணர்வு களை நசித்து விடவும் மனம் ஒப்பவில்லை. சமூகத்தின் கோலவழிப்பட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்பதும் கஷ்டமானது தான்.
“என்னப்பா...”
யோசனையில் மூழ்கியிருந்த அவனது தோற்றம் அவள் மனதில் பரிவைப் பெருக்கி யிருக்கவேண்டும். அவன் அமைதியாகப் பார்த்தான். மெல்ல அவனது கரங்களை எடுத்துத் தன் கரங்களுள் வைத்துக் கொண்டாள்.
“புதன்கிழமை வவுனியாக்குப் போறி யளோ...?”
“ம்”
“உங்கடை சிநேகிதரைச் சந்திச்சால் கேட்டுப் பார்க்கேலாதோ... ஒரு லட்சம் எண்டாலும் இல்லாமல் ஒண்டும் செய்யே லாதப்பா...?”
“கடன் வாங்கிச் செய்யத்தான் வேணுமே...”
“எனக்கும் மனமில்லைத்தான்... ஆனால் ஊரோடை ஒத்தோடாட்டில் பிள்ளை மனமுடைஞ்சு போகுமே...”
“ம்...கேட்டுப் பார்ப்பம்”
தயக்கத்தோடு சொன்னான். திருவரங்கன் வெறும் சிநேகிதன் அல்ல. உயிர்ச் சிநேகிதன். படிக்கும் காலத்தின் இணைபிரியாத நண்பன். இப்போது மிகவசதியாய் வவுனியாவில் இருக்கிறான். இவனது பணமுடை தெரியவந்தால் நிச்சயமாக உதவுவான். இவனது சுயகௌரவத்தை நன்கு அறிந்தவன். எவரிடமும் கடமைப்படாத பண்பு இவனது உயிரிலூறிய ஒன்று. ஆனால் வாழ்வின் தேவைகள் அதிலிருந்து அவனை விலகும்படி நெட்டித் தள்ளுகின்றன.
இவன் இன்று பின்னேரம் அலுவலகத்தி லிருந்து வீட்டுக்கு வந்தபோது வழமைக்கு மாறாக வீடு அமைதியாய்க் கிடந்தது. குருவிக்குஞ்சுகளின் “கீச்சுக் கீச்சுச்” சத்தத்தோடு ஓடித் திரியும் மகளவை மூவரையும் காணவில்லை. “கிளுக்” என்ற சிரிப்போடு ரெண்டாவது மகள் சாம்பவி ஒரு அறையிலிருந்து இன்னோர் அறைக்கு ஓடியதும் அவனுக்கு ஏனென்று புரியவில்லை. மனைவி இவனது செருப்புச் சத்தம் கேட்டதும் முன்னால் வராததும் அவனுக்குப் புதிராய் இருந்தது. அலுவலகப் பையைத் தன் அறையில் போட்டுவிட்டு அப்படியே சமையலறைக்குள் நுழைந்தான். நல்லெண்ணைப்பொரியல் கமகமத்துக் கொண்டிருந்தது.
“என்ன புதுச் சாப்பாட்டு வாசம் ஆளைத் தூக்குது...”
மனைவி திரும்பிப் பார்க்கவும் இல்லை. பதில் சொல்லவும் இல்லை.
“என்ன விஷேசம் இண்டைக்கு...?”
“சங்கீதா பெரிசாகீட்டுது...”
“அதுக்கென்ன... நல்ல விஷயந்தானே... அதுக்கேன முகத்தைக் தூக்கி வைச்சுக் கொண்டிருக்கிறீர்...”
கேட்டபடியே அவளது முகத்தைப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.
“ஏனப்பா... கண் கலங்கிறீர்...”
“வெங்காயம் தாளிக்கக் கண்கலங்குது...”
மனைவி சொன்னாலும் அவள் மனம் சரியில்லை என்பது முகத்தில் தெளிவாகவே எழுதியிருந்தது. அன்று அலுவலக வேலை வேறு அவனை நன்றாக முறிய வைத்து விட்டது. கற்பிப்பதோடு சம்பந்தமில்லாத நிர்வாக அலுவல்கள் என்றாலும் அதிபர் கேட்டுக் கொண்டதில் மறக்கமுடியாமல் போய்விட்டது. முகம் முறித்துக் கதைக்க மாட்டாத அவனிடம் உதவி கேட்க எவரும் தயங்குவதில்லை. புதிய பாடசாலைக்கு மாற்றலாகிப் போன அன்று இவன் கையெழுத்துவைத்து நிமிரவும் பின்னால் நின்ற சற்றே வயதான ஆசிரியர் ஒருவர் அவனிடம் வந்து குரல் தழைத்துச் சொன்னார்.
“முத்துப் போல எழுத்து... தம்பி அதிபருக்கு இடங் குடுத்திடாதையும்... பிறகு எழுத்து வேலையெல்லாம் உம்மிலைதான் பொறியும்...”
அறிமுகமே இல்லாத அவர் அவன் மீது கொண்ட கவனத்தில் அவன் மனம் நெகிழ்ந்தது. ஆனால் மறுநாளே அவர் ஒரு கட்டுத்தாள்களோடு வந்தார்.
“இதைக்கொஞ்சம் நேரமிருக்கிற வேளை யிலை பதிஞ்சு விடுவீரே தம்பி... கைநடுக்கமாய் இருக்கிறதிலை வடிவாய்ச் செய்யேலாமல் இருக்குது...”
“எப்பிடித்தான் சனம் தயங்காமல் உதவி கேட்குதோ தெரியாது” தனக்குள் நினைத்துக் கொண்டான். அவர் சொன்னதே போல இப்போது அலுவலக எழுத்து வேலைகள் அவனில் தான் பொறிந்து கிடக்கின்றன. அதற்குள் தலையிடி வேறு. கண்பிரச்சினையோ என்று நினைத்தாலும் இன்னும் வைத்தியரிடம் போகவில்லை. கண்ணாடிச்செலவை விரும்பாத மனம் வேலைப்பளுவைக்காரணம் காட்டிக் கொண்டிருக்கிறது. கன்னத்தில் மெல்ல எட்டிப்பார்த்த வெண் தேமலுக்கு மனைவியின் நச்சரிப்புத்தாங்காமல் கடந்த வாரம் மருந்து வாங்கப் போனான். மருந்தை வாங்கிக் கொண்டு இவன் ஷேர்ட் பொக்கெற்றைத் தொடவும் “இதென்ன காசு வாங்கிற மாதிரியே பழகிறன் உங்களோடை” என்று டொக்ரர் கடந்தகாலச் சிநேகத்தை மனத்திருத்திக் கைபற்றிச் சொன்னார். அந்த வாரத்தில் அன்றைய புதன்கிழமையை அவனுக்கு பிடித்துப் போனது. மருத்துவச் செலவு மட்டுமென்ன வாழ்க்கைச் செலவு எல்லாமும் தான் “கண்மண் தெரியாமல் அதிகரித்துக்கிடக்கிறது. ஆனால் சம்பளம் மட்டும் சீராக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
“பிள்ளை எங்கை...”
“மூண்டாம் அறையிலை இருக்குது...”
அறை வாசலுக்கு இவன் வந்தபோது ஒரு புதிய பனையோலைப் பாயைப் போட்டு கால் முட்டும் பாவாடையோடு அமர்ந்திருந்தாள் மூத்த மகள். குழந்தைத்தனம் மாறாத அப்பாவித்தனம் தவிர வேறேதும் காட்டாத பளிங்கு முகம். இவனைப் பார்த்ததும் “அப்பா” என்று வழமை போலக் கீச்சுக் குரலில் கத்தாமல் கீழே பார்த்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் அவள் வயதுத் தோழிகள். “கிளுக் கிளுக்” என்ற சிரிப்பு. அந்தச் சிரிப்பினால் தாங்கள் ஏதோ விஷயந் தெரிந்தவர்கள் போல பாவனை பண்ணும் அவர்களது குழந்தைத்தனம் அவனது மனதுக்குள் சிரிப்பலைகளை ஆக்கிற்று. அவனது முகமலர்வை அறிமுகப் பேச்சாகக் கருதி ஒரு துடுக்குப் பெண் கேட்டே விட்டது.
“சாமத்திய வீடு பெரிசாய்ச் செய்யப் போறீங்களோ அங்கிள்...”
உடனே கிலுங்கும் மணிச் சத்தங்களாய்க் கூட்டத்தின் சிரிப்பு. அந்தப் பெண்ணின் அக்காவிற்கு அண்மையில் கொண்டாடப்பட்ட பூப்புனித விழா அவ்விதம் கேட்க வைத்திருக்க வேண்டும்.
“ம்”
ஒருமாதிரிச் சிரிப்போடு மெல்ல நழுவினான். அவனது சக்திக்கு மிஞ்சிய வேலை தான். ஆனாலும் “நல்ல” வீடியோ பற்றி சொரியப்பட்ட தாமரைப் பூக்கள் சூழலும் நீர்த்தாழியில் சிரித்தபடி குளிப்பது பற்றி பிறகு வானூர்தியில் கையசைத்துக் கொண்டு விடை பெறுவது பற்றிப் பல காட்சிகளை சுவைபட விபரித்து அவற்றுக்கு வர்ணம் ஊற்றிக் கொண்டிருக்கும் தோழியர் நடுவிலிருந்து கனவு வளர்க்கும் சின்னமகளை எப்படி ஏமாற்றுவது? அந்தப் பிஞ்சு விழிகளில் வழியும் கனவுகளை வாசிக்க அவனுக்கு முடியும். பின்னேரப் பேப்பரை எடுத்துக் கொண்டு இருந்தவனை “போருக்கு நாங்கள் தயார் நீங்கள் தயாரா?” என்ற அமைச்சர் ஒருவரின் “அறிவுக்கலப்பற்ற தம்பட்ட மடிப்பு” கோபப்படுத்தியது. எதிர்க்கட்சி அமைச்சர் ஒருவரின் “அரிசி விலையேறக் கூடும்” என்ற ஏதோ காரணம் கருதிய எதிர்வு கூறல் வயிற்றில் நெருப்பள்ளிக் கொட்டியது. வெறுப்போடு பேப்பரை அப்பால் போட்டான். ஆனால் அப்படிப் போடமுடியாத வாழ்வின் போக்கு மட்டும் இரவுவரை நீண்டு மனைவியிலும் தங்கி நித்திரை தொலைக்க வைத்துக்கொண்டி ருக்கிறது. யன்னலூடாய் வெளியே பார்த்தான். நிலவு கருமுகில்களிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் ஒளிமுகம் மென்மேலும் மறைந்து கொண்டிருந்தது
****
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான். இருபுறமும் பரந்திருந்த வெளிகளை வாகனங் கள் அள்ளியெற்றிய சாம்பலில் கரும்பச்சை நிறந் தொலைத்திருக்கும் குறும் பற்றைகளை வீரம் விளைந்த மண்ணில் வளர்ந்து போரில் தலை கொடுத்து நிற்கும் பனைமரங்களைப் பார்த்துக் கண்கள் களைத்திருந்தன. தொடர் போரின் விளைவாய்ப் புதிய முதலீடுகளற்றுச் சோருந் தாய்மண்ணில் எவ்வளவு பிரதேசம் பயன் பாடில்லாமல் வீணே கிடக்கிறது.
மென்மயக்கம், பசியில்லை, துன்பம் மறைந்து வசிக்கின்ற மனத்தின் சோர்வாக இருக்க வேண்டும். வெயில் அனலாய்க் கொளுத்திக் கொண்டிருந்தது. வீசும் காற்று சற்றே குளிர்மை எற்றிப் போயிற்று. இவனின் முன்னால் ஒரு பதினேழு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கையடக்கத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் வெறும் பகட்டுச்சின்னமாய் இளைஞர்கள் கையில் உலவுகின்ற கையடக்கத் தொலைபேசி இருந்தால் இவ்வாறான வேளைகளில் குடும்பத்தினரின் மன ஆறுதலுக்கு உதவும் தான். ஆனால் அதற்கான செலவை எப்போது தான் அவனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ள முடியுமோ தெரியாது. மெல்லக் கண்கள் சோர்ந்தன.
“ஒரு மாளிகை போல வீடு. பலரது வரிசை. நட்பின் மீதான நம்பிக்கை முகத்தோடு அந்த வரிசையில் நிற்கிறார் குலேசர். தன்வறுமை சொல்லிக் கண்ணபிரானிடம் கையேந்தும் நிலைமை அவரது. கையில் ஒரு சிறு பொதி. அவலாக இருக்க வேண்டும். தூரத்தே அழகிய சிம்மாசனத்தில் ராஜ வனப்போடு வீற்றிருக் கிறார் கிருஷ்ணபகவான். அவர் குலேசரை வரிசையில் கண்டதும் எழுந்து ஓடோடி வருகிறார். நட்பின் நெகிழ்ச்சி மிக்க கணங்கள். குலேசர் கைச்சிறுபோதியைக் கண்ண பிரானிடம் கொடுக்கிறார். இருவரும் சூழலை மறந்து நிற்கிறார்கள். அக்காட்சியைக் கூர்ந்து பார்த்தபோது குலேசரின் முகம் தனது முகத்துடன் ஒன்றிப்பதைக் காண்கிறான். அழகிய சிரிப்பைச் சிந்தியபடியே அவனை அணைத்துக் கொள்கிறான் திருவரங்கன். கைச்சிறுபொதியில் இருந்து யாழ்ப்பாணத்துக் கறுத்தக்கொளும்பான் மாம்பழங்களை எடுத்து அவனிடம் நீட்டு கிறான் இவன்...”
திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான். காதல் பொழுதில் மட்டுமன்றித் துயரங்களிலும் தன் கற்பனாதிறத்தைக் காட்டும் மனத்தின் விளையாட்டுக்களை நினைக்க அவனுக்குப் பெரும் வியப்பாய் இருந்தது. மெல்லக் குனிந்து மாம்பழங்கள் நசியாது இருப்பதை உறுதிசெய்து கொண்டான். மனைவி காய்ப்பதத்தில்தான் அவற்றை வைத்திருந்தாள். வறுமை தெரியாத செம்மையாய் வாழ்க்கை வண்டிலைத் தள்ளத் தெரிந்த கெட்டிக்காரி அவள். முன்பு எப்போதோ சொன்ன திருவரங்கனின் “கறுத்தக்கொளும் பான் பிரியத்தை” நினைவிலிருத்தி அதைக் கொடுத்து விட்டிருந்தாள். அன்பான மனைவியை நினைத்த கணத்தில் மனம் துயரத்திலிழைந்து உருகிற்று.
கடன் கேட்க ஒரு மாதிரித் தான் இருந்தது. என்றாலும் சின்னமகளின் கனவுகளைக் கலைக்கவிரும்பாத தந்தைமனம் கடன் வாங்குவதை ஒருபுறம் நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. வீண்வரட்டுக் கௌரவத்தை வைத்துத் தான் என்ன செய்வது? வேறு யாரோவா என்ன? திருவரங்கன் தானே. உயிர் வரை இழைந்திருந்த நண்பன் தானே. வாழ்க்கை என்றால் ஏற்றமும் இறக்கமும் தானே. நாளை காலம் மாறிவிட கடனைத் திருப்பிக் கொடுத்து விடப் போகிறான். ஆனால் அந்தப் பொழுதில் மகளின் “இந்த” விருப்பத்தை செய்து கொள்ள முடியுமா என்ன? கேட்பதில் தவறில்லை. ஆனாலும் நீண்ட பல வருடங்களின் பின் சந்திக்கப் போகின்ற நண்பனிடம் இல்லாமை சொல்லி பணம் கேட்பது சரிதானா? ஊருக்குள் கடன்வாங்கிச் செய்வதில் மனைவிக்குத் துளியும் பிடிப்பில்லை. விழாவில் வயிறார உண்டு விட்டு ஆறுதலாக இருக்கும் வேளையில் பெண்கள் அதைப் பற்றி ரகசியமாய்ப் பழித்துக் கதைப்பார்களாம்.
அப்படியான ஊருக்குக் கொண்டாட்டம் செய்து காட்டித் தான் என்னாகப் போகிறது? மனம் கிளித்தட்டு வீரனாய் வலமும் இடமும் போக்குக் காட்டி ஓடிற்று. சிந்தனையில் களைத்து மீண்டும் விழிகளை மூடிக்கொண்டான்.
****
வவுனியா வந்து சேர ஒரு மணியாகி விட்டது. ஒருமாதிரி வீடு கண்டுபிடிக்கவே போதும் போதுமென்றாகி விட்டது. தூணில் தங்கநிறத்தில் “திருவரங்கம்” என்று பெயர் மின்னிற்று. வெளியே நின்று கூப்பிட்டபோது வழமையான பணக்காரவீட்டு இயல்போடு உயர்ந்த இன நாய் ஒன்றின் கம்பீரமான குரைப்புப் பதிலாய் இருந்தது.
“திரு”
பலவருடங்களின் பின் நண்பனின் பெயர் சொல்லி அழைக்க ஏனோ ஒரு மாதிரி இருந்தது.
“திருவரங்கன்”
முழுப்பெயர் சொல்லி அழைத்தான். அப் பெயர் கொண்ட கடவுளின் காதிலும் சேர்த்துக் கேட்டிருக்க வேண்டும். ஒரு சிறுபையன் ஓடிவந்து கேற்றைத் திறந்தான். ஏழுவயதிருக்கும். அப்படியே திருவின் சாயல். “பிள்ளை விஷயத்திலும் கடவுளின் அருட்பார்வை நண்பனுக்குக் கிடைத் திருக்கிறது” என்ற நினைப்பு நீர் மீதெழும் அநித்திய வளையமாய் அவன் மனதில் எழுந்து அழிந்தது. அவ்வளையங்கள் உருவற்று அழிந்தபிறகும் நீருள்ளேயே வசிப்பது போல அவ்வெண்ணம் தொடர்ந்தும் அவன் மனதில் தங்கி அவனும் மனைவியும் வேண்டியும் கிடைக்காது போயிருந்த “ஆம்பிளைப்பிள்ளை நினைவை” மீட்டி அவனை ஏங்க வைத்தது.
“அப்பா நிக்கிறாரோ தம்பி...?”
“ம்... வாங்கோ... உள்ளுக்கு...”
கிருஷ்ண மாளிகையாக இல்லை எனினும் திருவரங்கம் சற்றே பெரிய வீடுதான். விசால மான ஹோல். கைப்பையை வைத்துவிட்டு இருந்தான். பையன் அவனை இருக்க வைத்து அன்றைய நாளிதழையும் எடுத்துக் கொடுத்து விட்டுப் போனான்.
“இருங்கோ அங்கிள்... அப்பா குளிக்கிறார்... இப்ப வந்திடுவார்...”
குணத்திலும் அப்படியே திருவரங்கனின் வார்ப்பாக இருந்தான் பையன். காத்திருப்புப் பொழுதின் சலிப்பைப் போக்கக் கண்களைச் சுழற்றினான். கதிரைச் சீலையில் இருந்த ஓவியம் அவனைக் கவர்ந்தது. அது அவன் மனதில் பால் வார்த்தது. அரசர் புலவருக்கு பொற்கிழி வழங்கும் காட்சி அது. திரு இன்னமும் மாறாமல் தான் இருக்கிறான். அவன் சின்ன வயதிலும் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் தான். தான் கொண்டு வரும் பேனை, பென்சில், புத்தகம் எதென்றாலும் யார் கேட்டாலும் கொடுத்து விடுவான். வீட்டில் தான் கொடுத்ததைச் சொல்லாமல், தொலைத்ததற்காக அடி வாங்கினாலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் கொடுக்காமல் இருக்கமாட்டான். பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனை “மச்சான்... நீயோடா...” என்ற பாச அழைப்பு உலுக்கி எழுப்பியது.
“எத்தினை காலம் கண்டு... என்ன மச்சான் இந்தப்பக்கம்... கொஞ்சநாள் நிண்டு தங்கிப் போகலாந்தானே...”
மூச்சு விடாமல் கதைத்தபடி இவனது கைப்பையை உரிமையோடு எடுத்துக் கொண்டு வீட்டினுள் அழைத்துப் போனான். மாம்பழங்களை எடுத்துக் கொடுத்தான்.
“நீ இன்னும் என்னை மறக்கேல்லையடா...”
மனமுருகிச் சொன்னான். மனைவியைக் கூப்பிட்டு நண்பனை அறிமுகப்படுத்தினான்.
“இவன்தான் ரதன்... பகீரதன்... நான் சொன்னனே... படிக்கிற காலத்திலை ஒருத்தரிட் டையும் கையேந்தாத மன்னன் எண்டு... என்ன மச்சான் இப்பவும் அப்பிடித்தானோ?...”
இவனை மலர வைக்க பழைய காலத்தை நினைப்பூட்டி இடி இடியெனச் சிரித்தான் திருவரங்கன். ஆனால் இவனுக்கு உள்மனத்தில் சடாரென வலித்தது. சந்தோஷமான நினைவுகளைத் துன்பமான பொழுதில் மீட்பது போலத் துன்பம் எதுவுமில்லைத்தான்.
இரவு முறையான விருந்துபசாரம் பயணக் களைப்பைக் குளிப்பும் நல்ல சுவையான சாப்பாடும் இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தன. இரவு பதினொரு மணிமட்டும் இருந்து பழைய கதைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். படிக்கும் காலத்தில் பெரும் கெட்டிக்காரர்களாய் உலவி இப்போது பெயரே தெரியாமல் போய் விட்ட நண்பர்களைப் பற்றி அதிஷ்டம் கைகொடுத்துத் தூக்கி அரியாசனத்தில் வைத்திருக்கும் சிநேகங்கள் பற்றி தமது அழகால் பல இளைஞர் களின் தூக்கத்துக்கு உலை வைத்துத் திரிந்த “முடிசூடாராணிகள்” பற்றி முகிழ்ந்தும் மலராது கருகிப்போன சிலரது இதய அன்புகள் பற்றி நிறைவேறிய கல்லூரிக் காதல்கள் பற்றி என எல்லாமும் கதைத்தார்கள். மூத்தபெண் பெரிய பெண்ணான விஷயத்தைச் சொன்ன பிறகும் கடன் விபரத்தைச் சொல்ல நாவெழவில்லை இவனுக்கு. நண்பனுடன் தங்கி ஆறுதலாகக் கதைக்கக் கிடைத்தும் கூட கடன் கேட்க முடியாதிருந்தது. அவன் கொண்டிருக்கும் தன்னைப் பற்றிய சுயகௌரவத்தை உடைக்க மாட்டாதவனாய் அதேவேளை சின்ன மகளை ஏமாற்ற முடியாதவனாய் மனதுள் மறுகிக் கொண்டிருந்தான். அந்த வேளையில் இங்கு தங்கியபடியால் தங்குமிடச் செலவும் சாப்பாட்டுச் செலவும் மீதமானதை நினைத்து ஒருகணம் ரகசியமாய் மலரும் தன் மனதின் செயலில் தனக்குள்ளேயே கூசிப் போனான். மறுநாள் பின்னேரம் புறப்பட ஆயத்த மானவனை தங்கிப் போகும்படி வற்புறுத் தினான் திரு.
“இல்லையில்லை... என்னோடை வந்த ஆக்களோடை திரும்புறது நல்லது... பயணமும் சந்தோஷமாயிருக்கும்...”
பொய்ச் சாட்டுக் காட்டிப் புறப்பட்டாயிற்று. வெளி வாசலுக்கு இவன் வரவும் திருவரங்கன் கூடவே வந்து ஒரு சிறுபெட்டியைக் கைகளில் அழுத்தினான்.
“மச்சான்... தவிர்க்க முடியாமல் நாங்கள் வரமுடியாமல் போனாலும் ...இதை எங்கடை அன்புப் பரிசாய் மகளுக்குக் குடுத்திடு...”
மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
“கஷ்டம் ஏதுவெண்டாலும் தயங்காமல் எனக்குச் சொல்லு... நானொருத்தன் இருக்கிறதை மறந்திடாதையடா...”
“ஓமோம்... கஷ்டம் ஒண்டுமில்லை... நீங்களும் ஒருக்கால் அங்காலிப் பக்கம் வரத்தான் பாருங்கோ...”
சொன்னபடியே வெளியேறி நடந்தவன் சற்றுத் தூரம் சென்றதும் திரும்பிப் பார்க்கவும் திருவரங்கன் குடும்பம் வாசலில் நின்று கைகாட்டியது கண்டு நெகிழ்ந்தான்.
“நல்ல வேளை... காசு கைமாறத் தான் வந்ததெண்டு சொல்லேல்லை...”
தனக்குள் சொல்லிக் கொண்டான்.
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டதும் முதல் வேலையாக சிறுபெட்டி திறந்து பார்த்தான். உள்ளே அழகிய ஒருசோடி முத்துக் குவைகளினாலான வெண்தோடும் பதினைந்து ஆயிரம் ரூபாய்த் தாள்களும் ஒரு பாரதியார் கவிதைகள் புத்தகமும் இருந்தன. அத்துடன் அன்பு மகளுக்கு... இனிய வாழ்த்துக்களோடு... திருவரங்கன் குடும்பம் எனும் சிறுகுறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. நன்றியில் நெகிழ்ந்தான்.
“முகத்துக்கு நேரிலை... சிரிச்சு... பின்னாலை பழிக்கிற ஊருக்குப் பெரிசு காட்டித் தான் இப்ப என்ன வரப் போகுது...?”
இப்போது மனச் சில்லு திசைமாறிச் சுழலத் தொடங்கியிருந்தது.
****
களைப்போடு வீட்டின் வெளிக்கதவு திறந்த போது சின்னதொரு மான் குட்டியாய் இரண்டாவது மகள் துள்ளி ஓடிவந்தது. குட்டியறை யன்னலுக்கு அவன் விழிகள் தன்னிச்சையாய்ப் பாய்ந்தபோது அங்கு அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காது கனவுகாவிய ஒருசோடி பிஞ்சு விழிகள் விரிந்திருந்தன. மனைவி நம்பிக்கை ஒளி முகத்தில் விரிந்திருக்க வாசற்படியில் நின்று கொண்டிருந்தாள்.
****