சியாட்டின் உலகமே இருண்டு கொண்டது போலாயிற்று. சல்பர் மஸித்தேன் புட்டியைக் கொண்டு வந்து பருக்கியவன் தலையில் பேரிடி வீழ்ந்தவன் போலானான்.
வெள்ளை வேளேரென்ற மென்மையார்ந்த இமை மடலைத் திறக்கவே முடியாதபடி கோழிகள் பொத்துப் பொத்தெனச் சுருண்டு வீழ்ந்தன. கால்கள் சூம்பி எழுந்து நின்றிடத் தெம்பில்லாமல் அவலப் பட்டன.
பறவைக்காய்ச்சல் பற்றி அறிந்திராத சியாட் விசனத்தின் விளிம்பு நிலைக்கே போய்க் கொண்டான். செய்வதறியாச் சிக்கல் அவனை ஆட்கொண்டது. மேற்கொண்டு செய்வதறியாத் திக்குமுக்காடலில் திளைத்தெழுந்தான்.
முழுமையாக ரப்பர் பால் சொரியும் மரங் களினால் விரவியிருந்த மலைப்பாங்கான எப்பாவெலத் தோட்டத்திலே புல்லுப்பிடுங்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தான் சியாட். தோட்ட முதலாளி பெருவாரியான சொத்திருந்தாலும் அரசு உடமையாக்கப்பட்ட காலத்திலே மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது ஏக்கர் சிறுபகுதிக்குள் தான் வாசஸ்தலம். அரசு ஏப்பமிட்ட பகுதிக்கு ஈட்டிய நஷ்டஈடு பல்வேறு முதலீடுகளாகி அவருக்கு பல்வகை வளப்பம் வாரியிறைக்கிறது.
ஒட்டுப்பால் விலை வீழ்ச்சியின் பின் கோழிப்பண்ணை ருசி கொண்டார். புரொயிலர் விநியோக எடுபிடி வேலைக்கு சியாட்டையே அமர்த்திச் சம்பாத்தியம் கண்டார்.
ரப்பர் மடுவம் கோழிகளால் ஆக்கிரமிப்புக் கண்டது. கோழித் தீவனம் பசளை ஸ்ரோர்களில் பெருவாரியாக அடுக்கப்பட்டது.
பால் சொரிந்த மரங்கள் அலட்சியப்படுத்தப் படுவதாயிற்று. பசளையிடல் அருகிப் போயிற்று. ரப்பர் ஆய்வாளரின் ஆலோசனைகள் கிடப்பில் வீசப்பட்டது.
சியாட்டைப் போல் சகபாடிகள் கோழிப் பண்ணைப் பராமரிப்பினில் விடப்பட்டார்கள். ஆனாலும் - சியாட் மட்டுமே முக்கியத்துவமான பராமரிப்பாளன்.
மனிதவளத்தை தனது வாத்சல்யத்திற்கே பயன்படுத்துகிறதில் வல்லியத்தை முதலாளி மகா வல்லவரே - வெள்ளிக் கிழமைகளில் ஜும்மாவுக்கு சியாட் அவிசாவளை ரவுண் போய்வர போக்குவரத்து வசதி கூடக் கிடைக்காதவன். கோழிகள் பயணப்பட சொகுசான அளவுக் கூண்டுகள் கொண்ட லொறி இருக்கவே இருக்கிறது. ஐவேளைத் தொழுகைகள் அவனால் நினைத்துப் பார்த்திடக் கூட இயலாத இயந்திர வஸ்துவாகியிருந்தான்.
பால் வெட்டுப் பழகிய நஸ்ரீனா மீதெல்லாம் மோகம் ஏற்பட்டதுண்டு. களு தொதல் பைக்கெற்றுகள் அவளுக்காக வாங்கி வந்ததுமுண்டு.
ஆனால் அவளோ பால் வெட்டு வருவாய் குன்றுவதால் அக்காக்காரி குடும்பத்தோடு ஒட்டியபடி பிட்டகந்தைக்குப் போய்ச் சேர்ந்தும் விட்டாள்.
ரவுண் போய்த்திரும்புகிற போதெல்லாம் வெள்ளிக்கொலுசு வாங்கி நஸ்ரீனுக்கு நீட்டியிருக்கிறான். அவளும் வேண்டாம் என்றுஞ் சொல்லாமலே வாங்கிக் கட்டியிருக்கிறாள். அது பற்றி தோட்டமெல்லாம் சொல்லித் திரிந்தாள். ரப்பர் மரங்களுக்கு கொலுசுக் கிலுங்கலைத் தெரிவித்தாள்.
கோழிக் கழிவுகள் உள்ளங்காலில் ஒட்டி யப்பிக் கொள்ள மேய்ச்சல் செய்வதே அவன்பாடு. குஞ்சு பொரிப்பதற்கு மின்விளக்கைப் பொருத்துதலும் கூண்டுகள் சகலவற்றையும் சீர்படுத்திச் சுத்தம் செய்வதும் கோழித்தீனை மரத்தூளிடையில் விரவி மல்லாடுவதும் அவன் மட்டுமே. கேட்கிற நாதி யாருக்குமேயில்லை.
இட்ட முட்டைகள் சேதகப்படுத்தாமல் சேகரிக்கப்பட்டு கேஸ்களில் அடுக்கப்பட்டு லொறியிலேற்றி ரவுண் போகிறதா என்று மட்டும் கங்காணி வந்து கண்காணித்திடுவான். ரப்பர் வாளி ஒன்றைத் தன்னும் கடன் தந்திடமாட்டான். சியாட் தண்ணீரேனும் பருகி ஆறிட முடிவதில்லை.
கிரேப் ஸீற் படுமோசமான விலைக் குறைப்பு அடைந்ததால் கோழிப் பண்ணையிலும் புரோயிலர் விற்கிற விவகாரத்திலும் முதலீட்டை முடக்கி அட்டம்பிட்டிக் கடைத் தொகுதியைக் கட்டிய முதலாளிக்கு இப்போது பறவைக் காய்ச்சலின் பீதி அசுரவேகத்தில் ஆட்டிப் படைத்தது.
சியாட்டையே முதலில் கைகழுவுதல் உசிதம் என்று எண்ணத் தலைப்பட்டார்.
தினக்கூலியைச் செக்ரோலில் சேர்த்தே தாக்குப் பிடித்த கோழிக்களவும் அட்டகாசமான செலவு போல் அவருக்குப் பட்டிருக்கிறது. வெட்டுப் போட்டு கிரயத்தை நிர்ணயிப்பதிலே அவர் மகா சமர்த்தர்.
எலதெனிய ரீபிளான்ரிங் வெட்டுப் போட்டு ஒரு பெரிய பங்களா கட்டிப் போட்டிருக்கிறார். தரைக்கு பளிங்கு பதித்திருக்கிறார். அதிலே கால் பதித்தாலே நிற்பவரின் தோற்றமே துலங்கி ஜொலிக்கும்.
பஸ்கூலியை மட்டும் கொடுத்து அட்டம் பிட்டிக்குப் போகும்படி சொல்லி விட்டார்.
தோட்டத்தையும் கோழிப் பண்ணையையும் கடவுளாகக் கருதியவன் சியாட், கொதிப் படைந்து தோட்டத்தைச் சின்னாபின்னமாக்கி நிர்மூல மாக்கி நிலைகுலைக்காத நிலைப்பாட்டையே எடுத்தான். கடவுளிலே கைவைக்காத பக்தி யாளன் போலவே அங்கிருந்து கிளம்பினான்.
அட்டம்பிட்டிக் கடைத் தொகுதிக்கே வலலியத்தை வந்ததேயில்லை. உறவுக்காரன் ஒருத்தன் மூலம் உறிஞ்சியெடுப்பை நடத்தி முடித்திடுவார்.
சியாட் வந்ததும் வராததுமாக மேல் மாடியில் கடைக்கான குசினிக்குள் ஒதுக்கப் பட்டான். சீனிச்சாக்கு மூட்டையைக் காண்பித்தனர். காலையிலும் மாலையிலும் தேநீர் தயாரிப்பு முறை பற்றி விளக்கவுரை தந்தனர். தேயிலை விறகு பாவிக்க வேண்டிய அளவுகள் பற்றி பலத்த விரிவுரை தந்தனர்.
கடுங் குளிரில் தாக்குப் பிடிக்கப் போர்வையுமின்றி மேல் மாடியிலேயே படுத்தெழும்ப நேரிட்டது. கைகள் கொண்டு மார்பைப் பிடித்தாலும் நடுங்கித் தள்ளியே தீர்ந்தான். கால்கள் விறைப்புக் கண்டன. அடுப்பங்கரை நெருப்பும் குளிர் விறைப்பை குறைக்க உதவுவதாயில்லை.
விறகு பிளக்கும் வேலையும் விடிந்தும் விடியாமலும் குளிரோடு சேர்த்து வாட்டி யெடுத்தது. ஒரேயடியாக பிளந்து தள்ளியதும் நெஞ்சுக் கூடு படபடத்தது. சட்டியிலிருந்து நெருப்பு மீது பாய்ந்து வீழ்ந்த பாடாகிப் போனது. உதிரி வேலை செய்து முடிக்க ஒரு பட்டாளமாகச் சில்லறைக் கூலி என்று பட்டை நாமஞ் சூட்டிப் பகுக்கப்பட்ட வகைக் தாற்பரியம் அப்போது அவனுக்குள் உறைப்பெடுத்தது.
வடிந்தொழுகும் ரப்பர் பால் மரங்கள் தன் நிலையை உணர்ந்து வெண்மைப் பால் என்னும் கண்ணீரால்; மரத்து இரத்தத்தால்; அழுவது அவன் மனக்கண்ணில் அக்கணத்தில் மின்னிற்று. திரும்புந் தருணம் நோக்கியே ஏங்கினான். சிரட்டைகளுள் நிறைந்த ரப்பர் பாலையும் ஒட்டுப்பாலையும் திரட்டியெடுக்கும் தொழில் எத்தனை உயர்வானது என்பது அப்போது அவனுக்குள் பிரகாசமாகவே தெரிகிறது.