பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
பெரிய சல்லி
-- சிவனு மனோஹரன், ஹட்டன்

நேரம் ஏழு மணியைத் தாண்டி இருக்க வேண்டும். மென்மையான இருள் படர்ந்து தோட்டம் நிசப்தத்தில் கிடந்தது. அப்போது ஓட்டு லயத்தை வந்தடைந்த தலைவர் கிருஸ்ணசாமி நேரே பங்கஜத்தின் வீட்டினுள்தான் நுழைந்தார். அங்கே புகை மண்டிக் கிடக்கும் அடுப்படிக்குள் அல்லாடிக்கொண்டிருந்த பங்கஜம் தலைவரைக் கண்டதும் “என்னங்க சாமி இந்த நேரத்துல இங்கே வந்து நிக்கிறீங்க ஏதாவது நல்ல சேதி சொல்ல வந்தீங்களா...” என்றதும் “ஆமா பங்கஜம் ஒனக்கு பெரிய சல்லிக்கு செக்கு வந்திருக்கு நாளைக்கு அந்திக்கு ஒப்பீசுக்கு வந்து செக்க வாங்கிக்க அத
சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என்றதும் “காடு மல ஏறி அட்டையிலயும் தண்ணியிலயும் செத்து சம்பாதிச்ச சல்லி அந்த புண்ணியவானுக்கு தின்னு பாக்க கொடுப்பன இல்லாம போச்சி” என்று கண்ணைக் கசக்கியதைக் கண்ட தலைவர் “இங்க பாரு பங்கஜம் தாயிக்கும் புள்ளக்கிம் ஆயிரம் பெரச்சின இருக்கட்டும் எது எப்பிடி போனாலும் நாளைக்கு கொள்ளி வெக்க போறவன் அவன்தான் அதுனால முனுசாமியையும் கூட்டிக் கிட்டு ஒப்பீசுக்கு வா” என்று விடை பெற்றுக் கொண்டார் தலைவர் கிருஸ்ணசாமி.
நீண்ட நாளைய கனவு நனவாகப் போகும் சந்தோஷத்தில் தன் எண்ண பகிர்விற்காக பக்கத்து வீட்டுப் பார்வதியை நாடினாள் பங்கஜம். “இங்க பாருடி பங்கஜம் இந்த கால பய புள்ளைகள நம்புனம் அப்புறம் நாமத்தான் ரோட்டுல நிக்கனும். புள்ளைகள நம்பி ஏமாந்துப் போனவங்கள பாக்கிறம் இல்ல அதனால ஒழுங்கா யோசன பண்ணு ஒனக்கும் ஒரு பொட்டப் புள்ள இருக்கு இல்ல. எல்லாத்தையும் இவன் வாயில போட்டுட்டா அவ பாவம் இல்ல ஒரு நேர சோறு போடவே கணக்குப் பாத்தவன் முனுசாமி அதுனால யோசிச்சி செய்யி கட்டையில போற நேரம் நம்ம கையிலயும் நாலு காசு இருக்கனும்” என்றதும் எல்லா பக்கங் களையும் யோசிக்கத் தொடங்கினாள் பங்கஜம்.
இளமை தொலைந்து முதுமை வந்து அவஸ்திக்கும் போது உறவுகள் முதியவர்களை துச்சமாய் தனிமைப் படுத்தி விட்டு ஒதுங்கிக் கொள்ளும் கொடுமை இன்னுமே நம் சமூகத்தில் இருந்து களையப் படவில்லை என்பதை நினைக்கவே சங்கடமாகத்தான் இருக்கிறது அன்றைய இரவுத் தூக்கம் கண்களை தழுவாமல் பங்கஜத்தை அவஸ்தைப்படுத்தியதோடு புலர்ந்து போனது.
மறுநாள் மலையில் “ஏண்டி பங்கஜம் பெரிய சல்லிக்கு செக்கு வந்திருக்காமே மவனுக்கு சொல்லி அனுப்பிட்டியா இங்க பாருடி நம்ம என்னதான் தெனாவட்டா திரிஞ்சாலும் கடைசி காலத்துல அண்டுறதுக்கு ஒரு எடம் வேணும் அதுனால பழசு எல்லாத்தையும் மறந்துப் புட்டு மவன கூட்டிக்கிட்டுப் போ” என்றாள் சிவகாமி.
மறுபடியும் கடந்த கால கொடூரங்களை ஒரு முறை திரும்பிப் பார்க்கிறாள் பங்கஜம். மனசு வெறுப்பின் உச்சத்தை தொட்டாலும் தாய்மை எல்லாவற்றையும் மறந்து மறுபடியும் உறவு அன்பு என்று ஒரு கட்டத்திற்குள்தான் வந்து விழுகிறது. பழைய கோபதாபங்களை பெரிய சல்லி விழுங்கி ஏப்பமிட்டது.
அசுர வேகத்தில் கரையும் காலம்தான் நமக்கு பல்வேறு பாடங்களை கற்று தருகிறது. ஆனால் பாடம் புகட்டப்பட்டும் திருந்தாத சில ஜென்மங்களை எந்த வகைக்குள் அடக்குவது என்பதுதான் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. நீண்ட நாட்களாகவே வந்து போகாத பங்கஜத்தின் மகள் பரிமளம் திடீரென வந்து நிற்கவும் ஆடிப் போனாள் பங்கஜம். தன்னை மறந்து கட்டித் தழுவி அழுது புலம்பித் தீர்த்தாள் அப்போது “ஏன்டா முனுசாமி ரொம்ப நாளைக்குப் பெறகு தங்கச்சி வந்திருக்கா இல்ல நம்ம சந்திக் கடைக்குப் போயி ஒரு செமனு டின்னு வாங்கிட்டு வா நல்லது தின்னு எத்தன நாளோ” என்றதும் “அமா அப்பன் வீட்டு சொத்துப் பாரு ஓடுன ஓட்டத்துல அள்ளிக் கிட்டு வாறதுக்கு இவங்க என்னா பெரிய மகாராணியா உள்ளத தின்னா செத்துப் போயிருவாங்களோ” என்றதும் “அடி செருப்பால யாருக்கிட்ட என்னாப் பேசிற என்னடா கையில வெச்சி தாங்குறானேனு பாத்தேன் இருப்பு இருக்கும் மட்டும் தானா ஆட்டம் எல்லாத்தையும் வாங்கி முடிச்சிட்ட இல்ல அதுதான் கொரலு ஒசருது என்னடா எலி அம்மணமா போகுதேனு பாத்தேன் இப்பதானே புரியுது இல்ல அது சட்டப் போட்டுகிட்டுதான் போகுதுனு”.
“இங்க பாருடா என்னோட பெரிய சல்லியில இவளுக்கும் பங்கிருக்கு கூடப் பொறந்தவ கண்ண கசக்கிட்டு வந்து நிக்குறா நெஞ்சில கொஞ்சம் கூட ஈரம் இல்லாம இப்பிடி பேசுறியே என்றதும்” “இங்க பாரு கெழவி நீயே ஒரு தண்டச்சோறு இதுல வித்த மாட்டுக்கு என்னா வெல இருக்கு, இருக்க இஸ்டமுனா இரு இல்லனா போயிகிட்டே இரு” என்று விருட் டென வெளியேறினான் முனுசாமி.
தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுது தீர்த்த பங்கஜத்தை பரிமளம் எவ்வளவோ தேற்ற முயன்றும் முடியவில்லை. தன் மனப் பாரம் தீரும் மட்டும் அழுது தீர்த்தாள். விதியின் கொடூர ஆட்டங்களில் சிக்குப்பட்டு தனித்திருந்து அல்லல்பட்ட வேளைகளில் இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை எல்லாம் எண்ணி அழுது தீர்த்தாள். எல்லா வற்றையும் நொடிப் பொழுதில் விழுங்கி ஏப்பமிட்டு நெஞ்சில் ஏறி மிதித்து விட்டு போகும் முனுசாமியை நினைக்கும் போதெல்லாம் பங்கஜம் வெகுவாய் குழம்பித்தான் போனாள். அப்போதும் கூட ஏதோ கோபத்தில் பேசிவிட்டு போய் விட்டான் வெளியில் சென்று திரும்பினால் எல்லாம் சரியாகி விடும் என்றுதான் மகளைத் தேற்றினாள்.
இரவு எட்டுமணியிருக்கும் முழு போதையில் தள்ளாடியபடி உள் நுழைந்த முனுசாமி “ஏண்டி ஓடுகாலி எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இங்க வந்து அதிகாரம் பண்ணுவ இன்னொருத்தன் வீட்டுக்கு போன சிறுக்கி ஒனக்கு பணத்துல பங்கு கேக்குதா” என்று கொத்தாய் தலை மயிரை பிடித்து இழுத்து பரிமளத்தை தாக்கத் தொடங்கினான். வலி தாழாமல் பரிமளம் போட்ட கூச்சல் அந்த லயத்து சனங்களையே ஒன்று திரட்டியது. முடியும் வரை திட்டி தீர்த்துவிட்டு தாயையும் மகளையும் வெளியில் தள்ளி கதவடைத்து ஆறுதல் கண்டான் முனுசாமி.
மனசின் புழுக்கங்கள் எதையுமே தாயிடம் கூட சொல்லாத பரிமளம் இரவு முடியும் மட்டும் அழுது தீர்த்தாள். ஆனால் எதையுமே தாயிடம் பகிர்ந்துக் கொள்ளவில்லை. அழுது ஓய்ந்த அசதியில் சற்று கண்ணயர்ந்த பங்கஜம் விழித்துப் பார்த்தபோது உண்மையில் ஆடித் தான் போனாள். மனசு விபரீத எண்ணங்களில் தோய்ந்து திரும்பும் முன்னமே செய்தி காதுக்கு எட்டியது துடிதுடித்து சீவன் இற்று உதிரும் வரை அழுது தீர்த்தாள் பங்கஜம். இருப்பினும் வெறுப்பின் உச்சத்தில் இப்படி பலியாகிப் போன பரிமளம் திரும்பவா போகிறாள்? கால ஓட்டத்தில் இக்கொடுமையையும் கூட எல்லோரும் மறந்துப் போயினர். ஆனால் அன்று முதல் நடைப்பிண மாய் உலவத் தொடங்கிய பங்கஜம் பாதி நாட்களில் தன் நிலை குறித்து புலம்பத் தொடங்கி விட்டாள் உணர்வுகள் மடிந்து வாழ்தலின் பற்றுதல் அறுந்து போயிருப்பினும் பாழாய் போன வயிறு பசிக்கத்தான் செய்கிறது. அதற்காக சரி இரண்டொரு இடங்களை சுற்றிதான் வரவேண்டி யிருந்தது.
அன்றொரு சம்பள நாள் கொழுந்து மடுவம் தோட்ட மக்களால் நிரம்பிக் கிடந்தது. உச்சிமல தோட்டத்த சுற்றி திரும்பியதில் தோளில் கிடந்த அரிசிப் பை கனத்தது. அப்படியே பொடி நடையாக லயத்தை நோக்கிப் பயணித்த பங்கஜத்தை “அடியேய் பங்கஜம் கொஞ்சம் நில்லுடி ஒன்ன பாத்து எவ்வளவு நாளாச்சி” என்றவாறே அருகில் வந்த மாரியாயை ஒரு முறை மேலிருந்து கீழாக நோட்டமிட்ட பங்கஜம் இலேசாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு மறுபடியும் பயணிக்க லானாள் அப்போது “ஏண்டி இப்பிடி மாறிப் போயிட்ட ஒனக்கு சேதி தெரியுமா எனக்கு பெரிய சல்லிக்கு செக்கு வந்திருச்சி மவன வர சொல்லி கடுதாசி போட்டுட்டேன் நாளைக்கு தான் எடுக்கப்போறேன் சும்மா சொல்லப்படாது மவனும் மருமவளும் என்ன ராணி மாதிரி பாத்துகிறாங்க” என்றதும் மறுபடியும் ஒருமுறை மாரியாயை திரும்பி பார்த்த பங்கஜம் கைகொட்டி வாய்விட்டு சிரித்த படியே நடக்கலானாள். பங்கஜத்தின் நடத்தை மாற்றத்தை விளங்கிக் கொள்ளாத மாரியாய் குழப்பத்தில் உறைந்து நிற்க தூரத்தில் புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தாள் பங்கஜம். அப்போது அவளின் வாய் முணுமுணுக்கும் “பெரிய சல்லி, பெரிய சல்லி” என்ற புலம்பல் மட்டும் தெளிவாய் கேட்டுக் கொண்டே இருந்தது.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.