ஏப்ரல் - 2006 ஞானம் சஞ்சிகையில் வாசகர் பேசுகிறார் என்ற பகுதியில் மட்டக்களப்பைச் சேர்ந்த எம். சந்திரவதனன் “கார்ல் மார்க்ஸ் பெண்களின் விடுதலைபற்றி அதிகம் பேசவில்லை”, “கார்ல் மார்க்ஸ் பெண்களின் விடுதலைபற்றி சிந்திக்கவில்லை என்பதே உண்மை” என்று எழுதியுள்ளமையைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவருக்கு கார்ல் மார்க்ஸ் பற்றித் தெரியாத விடயத்தில் உள்ளமை புலப்படுகிறது. என் அன்புச் சகோதரியே, கார்ல் மார்க்ஸ் பற்றி எந்த நூலைப் படித்துத் தெரிந்து கொண்டீர்கள். தயவு செய்து கூறினீர்கள் என்றால் அதை நானும் படித்துப் பார்க்கலாம். ஆங்கில மொழிகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. சோவியத் யூனியன், மக்கள் சீனக் குடியரசு, இந்தியா போன்ற நாடுகள் தமிழ் மொழி உள்பட பல மொழிகளில் நூல்களை வெளியிட்டுள்ளன. கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘டாஸ் கப்பிற்றல்’, ‘கொம்யூனிஸ்ட் அறிக்கை’, உள்பட அவரைப் பற்றிய பல நூல்கள் இருக்கின்றன. ‘என்றென்றும் மார்க்ஸ்’ என்ற நூலை ஜா. மாதவராஜ் எழுதியுள்ளார். அது இந்திய பாரதி புத்தகாலயம் கடைசியாக வெளியிட்ட நூல். அது மட்டுமல்ல ஈழத்தின் பிரபல நாவலாசிரியர் 40 நாவல்களுக்கு மேல் எழுதியவர் மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர் செ. கணேசலிங்கன். “பெண்நிலை வாதச் சிந்தனைகளை மார்க்சிய நோக்கில் சொல்லியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது முக்கிய விடயம் என்று கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செ. யோகராசா கூறியுள்ளார். ‘ஒரு குடும்பத்தின் கதை’, ‘நான்கு சுவருக்குள்ளே இரண்டாவது சாதி’,‘ ‘நீ ஒரு பெண்’ ‘உலக சந்தையில் ஒரு பெண் ‘கோடையும் பனியும்’, ‘இருட்டறையில் உலகம்’ ஆகிய ஏழு நாவல்கள் பெண்ணிலை வாதச் சிந்தனைகளை மார்க்சியம் சார்ந்து நின்று கலாசார ரீதியான புரட்சி, வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பவற்றை யதார்த்தமாகச் சித்தரிக்கின்றன. எனவே தெரியாத விடயத்தை எழுதமுற்பட்டு உங்கள் அறியாமையை ஓதுவதை இன்றுடன் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டுகின்றேன். மார்க்சிசம் என்பது ஒரு தத்துவம். அது விஞ்ஞானத்தின் விஞ்ஞானம் அதில் சமுதாயப் பிரச்சனைகள் முழுவதற்கும் தீர்வு சொல்லப்பட்டுள்ள ஒரு வேதாந்தம்.
- மார்க்சிய தாசன், வெள்ளவத்தை.